6.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டை கண்டுபிடிப்பு

சமீபத்தில் மத்தியபிரதேசத்தில் உள்ள தார் மாவட்டம் பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாய் இடம்பிடித்தது உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கும். இந்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில், அங்குள்ள காட்டுப் பகுதியில் டைனோசர்களின் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த தலைப்புச் செய்திக்கு காரணம். 92 கூடுகளில் 256 புதைபடிவ முட்டைகள் இங்கிருந்துள்ளன. இந்தக் கண்டுபிடிப்பின் மூலம், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே நர்மதா பள்ளத்தாக்கு டைனோசர்களின் அடைகாக்கும் பகுதியாக இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில், கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு, மறுபடியும் தார் பகுதியில் டைனோசர்களின் புதைபடிவ முட்டைகள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதைபடிவ ஆராய்ச்சியாளர்களுக்கு உண்மையிலேயே இது சந்தோஷமான விஷயமாகும். இந்த முட்டைகளை கைப்பற்றி, அடுத்தகட்ட ஆய்விற்காக விஞ்ஞானிகள் குழுவிடம் ஒப்படைப்பதற்கான பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறது வனத்துறை.

வனத்துறையின் உட்பிரிவு அதிகாரி சந்தோஷ் ரஞ்சோர் கூறுகையில், “புதிதாக வேறு எங்கும் டைனோசர்களின் புதைபடிவ முட்டைகள் கிடைக்கிறதா என கடந்த சில மாதங்களாகவே நாங்கள் தேடி வந்தோம். இந்த தேடுதல் முயற்சியில் வனத்துறை பணியாளர்களோடு டைனோசர் குறித்து நிபுணத்துவம் கொண்டவர்களும் பங்கேற்றனர். இவர்களின் கடுமையான முயற்சிக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. தற்போது புதிதாக கிடைத்துள்ள முட்டைகள், மற்ற விலங்குகளை அடித்துக் கொல்லும் ஊனுண்ணி வகை டைனோசர்களின் முட்டைகளாக இருக்கலாம் என எங்களுக்கு தோன்றுகிறது” என்கிறார்.

கடந்த சில நாட்களில் மட்டும், பாஃக் கிராமத்தில் உள்ள பாகைன் ஆற்றங்கரையின் மூன்று வெவ்வேறு பகுதியிலிருந்து 25 புதைவடிவ டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஜனவரி மாதம் கண்டெடுத்த முட்டைகளுக்கும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள முட்டைகளுக்கும் அளவில் நிறைய வித்தியாசம் உள்ளன. ஆகையால், இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள முட்டைகள் வேறு வகை டைனோசர்களுடையதாக இருக்கும் என சந்தேகிக்கிறோம்.

ஒருவேளை அவை ஊனுண்ணிகளாக இருக்கலாம். இந்த புதைபடிவ முட்டைகள் 6.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் வரும் வரை எதுவும் உறுதியாக கூற முடியாது. சண்டிகர் மற்றும் லக்னோவில் உள்ள ஆய்வு மையங்களில் இந்த முட்டைகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக ரஞ்சோர் கூறுகிறார்.

டைனோசர்களின் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, தார் பகுதிகளுக்கு வெளிநாட்டினர் உள்பட பல சுற்றுலாவாசிகள் வரத் தொடங்கியுள்ளனர். இதனால் இங்குள்ள தோட்டத்தில் டைனோசர் புதைபடிவ பூங்கா ஒன்றை அமைக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.

புதைபடிவ முட்டையொன்றின் உள்ளே, எப்போது வேண்டுமானாலும் பொறிக்கும் தருவாயில் கரு ஒன்று பாதுகாப்பாக இருந்ததாக சர்வதேச நிபுணர் குழு 2021-ம் ஆண்டு கூறியிருந்தது. இது 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புள்ளது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதுவரையிலான கண்டுபிடிப்பில் இதுதான் முழுமையானதாகும். இந்த முட்டை தெற்கு சீனாவில் உள்ள கன்ஸோ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கருவிற்குள் உள்ள மாதிரிக்கு “குழந்தை யிங்லியாங்” என்று செல்லபெயரும் சூட்டப்பட்டது குறிப்பிடத்தகது.

Leave A Reply

Your email address will not be published.