முடிவுக்கு வருகிறது உக்ரைன் போர்?- சுவிசிலிருந்து சண் தவராஜா

ஒன்றரை வருடங்கள் கடந்தும் உக்ரைன் மோதல் நீடித்து வரும் நிலையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வை எட்டுதல் தொடர்பான கருத்துகள் மேற்குலகில் இருந்து வெளிவரத் தொடங்கியுள்ளன. மேற்குலகினால் பயிற்றப்பட்ட உக்ரைன் படையினர், மேற்குலகினால் அளவுக்கு அதிகமாக வழங்கப்பட்ட ஆயுத தளபாடங்களைக் கொண்டு, மேற்குலகின் உதவியுடன் பெறப்பட்ட புலனாய்வுத் தரவுகளோடு மேற்கொண்ட பதில் தாக்குதல் நடவடிக்கைகள் எதிர்பார்த்த வெற்றிகளைக் களத்தில் தராத நிலையிலேயே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுதல் என்ற கதையாடல்கள் எழத் தொடங்கியுள்ளன.

அண்மையில் இந்தக் குரல் யேர்மன் அதிபர் ஒலப் ஷோல்சிடம் இருந்து எழுந்துள்ளது. யேர்மன் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.”உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவர பரந்த அளவிலான இராஜதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்;. இதன் மூலமே ரஸ்யா மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட முடியும்” எனக் கூறிய அவர் உக்ரைன் மோதலுக்கு முடிவு கட்டும் விதமாக அண்மையில் சவூதி அரேபியாவில் நடைபெற்ற மாநாட்டை வரவேற்றுள்ளதோடு அது ஒரு நல்ல ஆரம்பம் எனவும் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவில் நடைபெற்ற மாநாட்டுக்கு ரஸ்யா அழைக்கப் பட்டிருக்கவில்லை. மோதலில் ஈடுபட்டுள்ள ஒரு நாட்டின் கருத்தைக் கேட்காமல் எடுக்கப்படும் முடிவுகள் எத்துணை தூரம் நடைமுறைச் சாத்தியமானவை என்ற கேள்வி எழுகின்றது. இந்த மாநாடு தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்த ரஸ்ய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மரியா ஷக்கரோவா அவர்களும் அதே தொனியிலான கருத்தையே முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் மேற்கொண்ட பதில் தாக்குதல் நடவடிக்கையின் வெற்றி தொடர்பில் அதன் நட்பு நாடுகள் சில ஆரம்பம் முதலே ஐயம் வெளியிட்டு இருந்ததை மறுப்பதற்கில்லை. அது மாத்திரமன்றி சில வேளைகளில் மேற்குலக நாடுகளின் ஆலோசனைகளையும் மீறி உக்ரைன் அதிபர் ஷெலன்ஸ்கி செயற்பட்டதாகவும் செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அத்தோடு உக்ரைன் நாட்டில் நிலவும் அளவுக்கு அதிகமான ஊழல் தொடர்பிலும் மேலைநாட்டு ஊடகங்கள் பேசத் தொடங்கியுள்ளன. இதற்கு ஏற்றால் போல உள்நாட்டில் பல களையெடுப்புகளில் அரசாங்கம் இறங்கியுள்ளதையும் பார்க்க முடிகின்றது.

இத்தகைய செய்திகள், சம்பவங்கள் என்பவற்றைப் பாரக்கும் போது தற்போதைய உக்ரைன் அரசுடனான மேற்குலகின் தேன்நிலவு முடிவுக்கு வருகிறதோ என்ற சந்தேகம் எற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

அது மாத்திரமன்றி உக்ரைன் நாட்டு அரசியல் பிரபலங்கள் சிலரும் கூட பேச்சுவார்த்தை மேசைக்கு தாம் நிர்ப்பந்திக்கப்படலாம் என்ற கருத்துக்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் உக்ரைன் ஊடகங்களுக்குத் தகவல் வழங்கிய உக்ரைனிய வெளியுறவுத் துறை அமைச்சர் டிமித்திரி குலேபா, “எதிர்வரும் முன்பனிக் காலத்தில் பேச்சுவார்த்தை மேசைக்குச் செல்வதற்கான நிர்ப்பந்தம் ஏற்படலாம் என எதிர்பார்க்கிறேன். அதற்கான குரல்கள் பலம்பெற்று வருகின்றன. சர்வதேச மற்றும் குற்றவியல் சட்டங்களின் அடிப்படையில் இந்தக் குரல்களை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியில் நாம் தொடர்ந்தும் ஈடுபடுவோம்” எனக் கூறியிருந்தார்.

இதே பாணியிலான் ஒரு செய்தியை யேர்மன் ஊடகம் ஒன்றும் அண்மையில் வெளியிட்டு இருந்தது. ‘டி வேல்ற்’ ஊடகத்தின் தகவலின் பிரகாரம் எதிர்வரும் பனிக் காலத்தில் உக்ரைன் போருக்குத் தீர்வு காணும் நோக்கிலான பேச்சுக்கள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சரின் கூற்றை மறுதலிக்கும் விதத்தில் உக்ரைன் தேசிய பாதுகாப்புக் கவுன்சிலின் தலைவர் அலக்சே டனிலோவ் கருத்துத் தெரிவித்துள்ள போதிலும் நெருப்பில்லாமல் புகையாது என்கின்றனர் நோக்கர்கள்.

உக்ரைனுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள ஆயுத தளபாட உதவிகளால் கள நிலவரத்தில் மாற்றம் எதுவும் நிகழ்ந்துவிடாத நிலையில் தொடர்ந்தும் பெருமளவு நிதியை வழங்குவதற்கு மேற்குலகம் தயங்குவது போலத் தெரிகின்றது. எனவே ஏதாவது விட்டுக் கொடுப்புச் செய்தேனும் ரஸ்யாவுடன் சமரசத்துக்குச் செல்லும் உத்தேசம் மேற்குலகத் தரப்பிடம் உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.

இந்தச் சந்தேகத்தை மெய்ப்பிப்பது போன்று அமைந்துள்ளது நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளரின் உதவியாளர் ஸ்ரெய்ன் யெனேசன் அவர்களின் கூற்று. நோர்வே ஊடகமொன்றுக்குச் செவ்வி வழங்கிய அவர், “தனது நாட்டின் 20 விழுக்காடு வரையான பிரதேசத்தை ரஸ்யாவுக்கு விட்டுக் கொடுத்து நேட்டோ அமைப்பின் உறுப்புரிமையை உக்ரைன் பெற்றுக் கொள்ள முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

அவரின் கூற்றை ஏற்றுக் கொள்வதற்கான ஆதாரங்கள் எதுவும் வெளிப்படையாக இல்லை. நேட்டோவின் உறுப்பு நாடுகள் எதுவும் இதுபோன்ற கருத்தை இதுவரை பொதுவெளியில் வைத்ததாகவும் தகவல் இல்லை. எனினும் இதுபோன்ற கருத்துகள் தொடர்ந்தும் வெளிப்பட்ட வண்ணமேயே உள்ளன.

கடந்த பெப்ரவரியில் சுவிஸ் நாட்டுப் பத்திரிகையான ‘புதிய சூரிச் நாளிதழ்’ ஒரு செய்தியை வெளியட்டிருந்தது. ரஸ்யாவுடன் சமாதான உடன்பாட்டுக்குச் செல்வதற்காக உக்ரைன் நாட்டின் 20 வீதமான பிரதேசத்தை ரஸ்யாவுக்கு விட்டுக் கொடுக்க சி.ஐ.ஏ.யின் பணிப்பாளர் வில்லியம் பேர்ண்ஸ் முன்வந்துள்ளதாக அந்தச் செய்தி அமைந்திருந்தது. எனினும் அந்தச் செய்தியை அமெரிக்க ரஸ்ய அரசுகளும் சி.ஐ.ஏ.வும் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் மேற்கொண்ட பதில் தாக்குதல் நடவடிக்கையில் கடந்த 2 மாதங்களில் 43,000 படையினர் கொல்லப்பட்டதாகவும், 5,000 வரையான கனரக ஆயுதங்கள் அழிக்கப்பட்டதாகவும் ரஸ்யத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை உக்ரைன் படையினர் முன்னேறுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் யாவற்றையும் ரஸ்யப் படைகள் முறியடித்தது மாத்திரமன்றி சில முனைகளில் முன்னேறியும் வருவதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. தற்போதைய நிலையில் ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறியரக விமானங்கள் மூலமான தாக்குதல்களில் மாத்திரமே உக்ரைன் ஓரளவு வெற்றிகளைப் பதிவு செய்து வருகின்றது. உக்ரைனின் இத்தகைய தாக்குதல்களுக்கு ரஸ்யத் தரப்பு உடனடியாகப் பதிலடிகளை வழங்கி வருவதையும் பார்க்க முடிகின்றது.

களமுனை இவ்வாறு உக்ரைனுக்குச் சாதகமாக இல்லாத நிலையில் சமரசத்துக்குச் செல்வதே ஒரே தெரிவாக இருக்க முடியும். ஆனால் அதனைத் தீர்மானிக்கும் இடத்தில் இருப்பது உக்ரைன் அரசுத் தலைவர் ஷெலன்ஸ்கி அல்ல. மாறாக அவரை வழிநடத்தும் மேற்குலகே. குறிப்பாக அமெரிக்காவே அந்த முடிவை எடுக்கும். அமெரிக்காவின் முடிவு சமரசத்துக்கே செல்வது என்று இருந்தால் ஷெலன்ஸ்கி அல்ல யார் முயன்றாலும் அதனைத் தடுத்துவிட முடியாது. அமெரிக்காவின் முடிவுக்குக் குறுக்கே ஷெலன்ஸ்கி நிற்க நினைத்தால் அவரை மாற்றிவிட்டு வேறு ஒருவரை அந்த இடத்தில் அமர வைப்பது ஒன்றும் அமெரிக்காவுக்குக் கடினமான காரியம் அல்ல.

உலகம் முழுவதிலும் வாழும் அமைதியை சமாதானத்தை விரும்பும் அனைவரும் உக்ரைன் மோதல் முடிவுக்கு வரவேண்டும் என்றே விரும்புகின்றனர். எப்படியாகினும் அது விரைவில் முடிவுக்கு வந்தால் உலகிற்கே நல்லது.

Leave A Reply

Your email address will not be published.