வீட்டை உடைத்தது குற்றம் இல்லையா? – உதவி முகாமையாளர் கைது செய்யப்படாதது ஏன் ? மனோ கேள்விக்கணை

சட்டத்தைக் கையிலெடுத்து வீட்டை உடைத்தது குற்றம் இல்லையா? – உதவி முகாமையாளர் கைது செய்யப்படாதது ஏன் என்று சபையில் மனோ கேள்விக்கணை

“மாத்தளை, ரத்வத்த தோட்டத்தில் சட்டத்தைக் கையில் எடுத்த உதவி முகாமையாளர் கைது செய்யப்படாதது ஏன்?”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பினார்.

மாத்தளை மாவட்ட எல்கடுவ பெருந்தோட்ட ரத்வத்த தோட்ட விவகாரம் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளியின் போது, இடைமறித்து சபாநாயகரின் அனுமதியுடன் மனோ கணேசன் எம்.பி. மேலும் கூறியதாவது:-

“அப்பாவித் தொழிலாளர் குடும்பத்தின் மீது மனிதபிமானமற்ற முறையில் அராஜகம் புரிந்து, குழந்தை அழுகின்ற வேளையிலும், வீட்டை உடைத்து துவம்சம் செய்த மாத்தளை, ரத்வத்த தோட்ட உதவி முகாமையாளர் இடமாற்றம்தான் செய்யப்பட்டுள்ளாராம். பணி நீக்கம் செய்யப்படவில்லையாம். நாடாளுமன்றத்தில் இன்று எமது ஆர்ப்பாட்டத்துக்குப் பதில் அளித்த பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண இந்தத் தகவலைக் கூறினார்.

அப்படியானால், யாரை ஏமாற்ற இந்த நாடகம் போட்டீர்கள்? அத்துமீறிய குடியேற்றமாக இருந்தாலும் அதை சட்டப்படித்தான் அணுக வேண்டும் என அமைச்சரே கூறுகின்றார். அப்படியானால் சட்டத்தைக் கையிலெடுத்து வீட்டை உடைத்தது குற்றம் இல்லையா?

இங்கே அரசு தரப்பினர் தங்கள் அமைச்சர்தான் முதலில் அங்கே போனார் என்றும், நான் போகவில்லை என்றும் கூறுகிறீர்கள். நான், அன்று முல்லைத்தீவில் இருந்தேன். உங்கள் அமைச்சர் அங்கே போனது நல்லதுதான். ஆனாலும் அங்கே போய் சும்மா சண்டை போட்டு என்ன பயன்? எதுவுமே நடக்கவில்லை.

நான் 19ஆம் திகதி நள்ளிரவு ஒரு மணியளவில், முல்லைத்தீவில் இருந்து பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரணவிடம் பேசினேன். மாத்தளை மாவட்ட எம்.பி. ரோஹினி கவிரத்னவிடம் பேசினேன். கந்தேநுவர பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் பேசினேன். இதற்கு மேல் அங்கே போய் நானும் சண்டை போட்டிருக்க வேண்டும் என நீங்கள் கூறுகிறீர்களா?

நான் மனோ கணேசன் சிவாஜி கணேசன் இல்லை. ரஜனிகாந்த்தும் இல்லை. அஜித்குமாரும் இல்லை. அங்கே போய் சண்டை போட்டு அதை வீடியோவில் போட்டு நான் காட்டவில்லை. கடைசியில் அப்படியே சண்டை போட்டும் என்ன பயன்? ஒன்றும் இல்லை.

நானும் நமது மக்களிடம் அடித்தால் திருப்பி அடியுங்கள் என்று கூறினேன். அது சட்டப்படி நியாயமானது. இங்கே பிரதமர் இருக்கின்றார். அவரது குணவர்த்தன வீட்டை எரித்தார்கள். அமைச்சர் பிரசன்ன வீடும், அமைச்சர் ரமேஷ் பத்திரண வீடும் எரிக்கப்பட்டன. அவை பிழையான காரியங்கள். ஆனால், அவை எரிக்கப்பட்ட போது உங்களிடமும் ஒரு கூட்டம் இருந்திருந்தால், நீங்கள் கட்டாயம் திருப்பி அடித்திருப்பீர்கள். அது நியாயம் தானே? தற்பாதுகாப்பு தானே?

நமது மக்கள் திருப்பி அடிக்கவில்லை. அதைப் பலவீனமாக நினைக்க வேண்டாம். அன்று இங்கே நாம் முழுநாள் விவாதம் நடத்தினோம். ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்று எல்லோரும் ஆதரவாக பேசினீர்கள். அது நடந்து ஒரு வாரத்துக்குள் இந்த பிரச்சினை. அதில் நான் ஒன்று சொன்னேன். அமைச்சரே, அது உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என எண்ணுகிறேன். அன்றைய பிரிட்டீஷ் வெள்ளையர் ராஜ்யம் இன்று பெருந்தோட்ட கறுப்பு ராஜ்யமாக மாறி உள்ளது. அவ்வளவுதான் மாற்றம்.

இந்தப் பெருந்தோட்ட நிலங்கள், பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு சொந்தம் இல்லை. அவர்கள் அங்கே நீண்ட குத்தகையில்தான் இருக்கிறார்கள். நாம் இலங்கையர். எமது பிரஜா உரிமை முழுமை அடையவில்லை. நாம் இலங்கைக்கு உள்ளேயே எமது பிரச்சிகளை தீர்க்க முயல்கிறோம். தயவு செய்து இந்த பிரச்சினையை இலங்கை பிரச்சினையாகப் பாருங்கள்.

நாம் அரசியல் செய்வதாக இங்கே ஒரு அமைச்சர் குற்றம் சாட்டுகிறார். இது சட்ட பிரச்சினை என்கிறார். அவரது பேச்சையிட்டு நான் வருந்துகிறேன். இது எமது மக்களின் மனிதாபிமான பிரச்சினை.

நாம் அரசியல் செய்யவில்லை. நாம் 2015இல் ஆட்சிக்கு வந்து 4 வருடங்களில் பல காரியங்களை செய்துள்ளோம். அதற்கு முன் ஜெயவர்தன, பிரேமதாஸ, சந்திரிகா, ராஜபக்ச, விக்கிரமசிங்க அரசுகளில் பங்காளியாக 40 வருடங்கள் இருந்தவர்கள் செய்தவர்கள் செய்தவற்றை விட பலமடங்கு அதிகம் நாம் செய்துள்ளோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.