4வது டி20 போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது நியூசிலாந்து.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நியூசிலாந்து அணி 4 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு டி20 போட்டியில் இங்கிலாந்தும், 3வது டி20 போட்டியில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய பேர்ஸ்டோவ் 41 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. ஆரம்பம் முதலே நியூசிலாந்து அதிரடியில் மிரட்டியது. தொடக்க ஆட்டக்காரர் சைபர்ட் 32 பந்தில் 48 ரன்னும், கிளென் பிலிப்ஸ் 25 பந்தில் 42 ரன்னும், சாப்மேன் 25 பந்தில் 40 ரன்னும் குவித்தனர். இறுதியில், நியூசிலாந்து 17.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரை 2-2 என சமனிலைப்படுத்தியது.

நியூசிலாந்து சார்பில் 3 விக்கெட் வீழ்த்திய மிட்செல் சான்ட்னருக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. பேர்ஸ்டோவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.