ஜி20 உச்சிமாநாடு: தட்டுகளை அலங்கரிக்கும் மசால் தோசை உள்பட 500 வகை உணவுகள்

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்களால் விரும்பி உண்ணப்படும் பாரம்பரிய உணவுகளை தயாரித்து ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களுக்கு பரிமாற நட்சத்திர உணவகங்கள் தயாராகி வருகின்றன.

நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கு என்றும் ஒவ்வொரு சுவையான உணவுகள் உள்ளன. ருசியும், சுவையும் இடத்துக்கு இடம் மாறுபடும். நாடு முழுவதும் மிகச் சுவையான உணவுகள் என பட்டியலிட்டால் ஒரு நாளே முடிந்துவிடும்.

இதனால்தான், புது தில்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில் உள்ள 120 சமையல் கலை நிபுணர்கள், நாடு முழுவதும் மிகச் சுவையான 500 உணவுகளைத் தேர்வு செய்து, ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க வரும் விருந்தினர்களுக்கு விருந்துபடைக்க திட்டமிட்டுள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களாக இக்குழுவினர் பல்வேறு உணவுகளையும் செய்துபார்த்து சுவை மற்றும் ருசியை கூட்டி தொடர்ந்து அதனை மெருகேற்றும் பணிகளை செய்து வருகிறார்களாம். ஒட்டுமொத்த நாட்டின் மிகச் சிறப்பான பாரம்பரிய உணவுகள் அனைத்தையும் இந்த மெனுவில் சேர்த்துவிட வேண்டும் என்பதே அவர்களது ஒற்றைக் குறிக்கோள்.

ஒரு தட்டு என்றால், அதில் 12 வகையான உணவுப்பொருள் இருக்குமாம். தெருவோரக் கடைகளில் விற்பனையாகும் உணவு முதல், தமிழகத்தின் பனியாரம், மகாராஷ்டிரத்தின் பாப் பாஜி வரை இதில் அடங்குமாம்.

ஒவ்வொரு நாளும் விருந்தினர்களுக்கு 170 வகையான உணவு பரிமாறப்படவிருக்கிறதாம். அதில், சிக்கன் கோலாபுரி, சிக்கன் செட்டிநாடு என அசைவ உணவுகள் மட்டுமல்லாமல், தென் இந்திய மசால் தோசை, பெங்காலி ரசகுல்லா, இந்திய இனிப்பு வகைகள், பானி பூரி, பேல் பூரி, சமோசா, வடாபாவ் உள்ளிட்டவை இடம்பெறவிருக்கின்றன.

இசை நிகழ்ச்சி
ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் சா்வதேச நாடுகள் மற்றும் உள்நாட்டுத் தலைவா்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு சனிக்கிழமை (செப்டம்பா் 9) விருந்தளிக்கிறாா்.

பிரகதி மைதானில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் உள்ள 78 கலைஞா்களை அடங்கிய ‘இந்தியா இசைப் பயணம்‘ என்கிற பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Leave A Reply

Your email address will not be published.