‘உங்கள் கருத்தை தமிழ்நாட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்’ – உதயநிதிக்கு சிவசேனா பதில்

உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை உங்களுடனேயே வைத்துக் கொள்ளுங்கள் என்று சனாதனம் குறித்து கருத்து தெரிவித்த உதயநிதிக்கு சிவசேனா பதில் அளித்துள்ளது. இதுபற்றி பதில் அளித்துள்ள சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே பிரிவுடைய மூத்த தலைவர் சஞ்சய் ராவத், சனாதனம் குறித்த கருத்துக்களை உதயநிதி தனக்குள்ளும், தனது மாநிலத்திற்குள்ளும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், இதுபோன்ற சர்ச்சை கருத்துக்களை கூட்டணி கட்சியான திமுக கூறினால், அதனை பாஜக அரசியலுக்காக பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல் நடத்தும் என்று கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், ‘உதயநிதி ஸ்டாலின் கூறியதற்கு யாரும் ஆதரவு அளிக்க மாட்டார்கள். நாமெல்லாம் இந்தியா கூட்டணியில் உள்ளோம். இது திமுகவின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். இது போன்றவற்றை பேசாமல் தவிர்க்க வேண்டும்.

இந்த நாட்டில் 90 கோடி இந்துக்கள் வாழ்கிறார்கள். முஸ்லிம்கள், கிறிஸ்தாவர்கள், பார்சி, ஜெயின், லிங்காயத் மக்களும் இங்கே வசிக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை இருக்கும்.

அவர்களது உணர்வுகளை நீங்கள் காயப்படுத்த முடியாது. உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை உங்களுக்குள்ளும் உங்கள் மாநிலத்திற்குள்ளும் வைத்துக் கொள்ளுங்கள்.’ என்று கூறியுள்ளார்.

கடந்த வெள்ளிக் கிழமையன்று சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் இந்திய விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸ்-ன் பங்கு என்ற புத்தகத்தை வெளியிட்டு தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

மாநாட்டில் அவர் பேசுகையில், ‘சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று நீங்கள் போட்டுள்ளீர்கள். சிலவற்றை ஒழிக்கத்தான் வேண்டும் எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல்,மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்க கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம்’ என்று பேசினார். உதயநிதியின் பேச்சை I.N.D.I.A கூட்டணியில் உள்ள காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகள் ஏற்காத நிலையில் தற்போது மற்றொரு முக்கிய கட்சியான சிவசேனாவும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.