துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு சந்தேகநபரைக் கைதுசெய்த பொலிஸ் – வடமராட்சியில் பதற்றம்.

படங்கள் & வீடியோ இணைப்பு –

யாழ்ப்பாணம், வடமராட்சி – அல்வாய் பகுதியில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரைப் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு இன்று கைது செய்தனர்.

அந்தப் பகுதியைச் சேர்ந்த நபரே துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்காகிக் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சந்தேகநபருக்கு எதிராக யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நீதிவான் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அந்நிலையில் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அண்மையில் இடம்பெற்ற குற்றச்செயலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அவரைப் பொலிஸார் தேடி வந்தனர்.

அதன்போது அவர் அல்வாய் பகுதியில் பதுங்கியிருக்கின்றார் என்று கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்தபோது, அவரது உறவினர்களான பெண்கள் உள்ளிட்டவர்கள், பொலிஸாரின் நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்தனர்.

அதனால் அங்கிருந்து திரும்பிய பொலிஸார் மீண்டும் இன்று மேலதிக பொலிஸாருடன் அப்பகுதிக்குச் சென்று சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட வேளை அவரின் உறவினர்கள் அவ்விடத்தில் கூடி பொலிஸாரின் நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்தனர்.

அவ்வேளை சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட வேளை அவர் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். அதன்பின்னர் காயங்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரைச் சிகிச்சைக்காகப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பொலிஸார் சேர்த்தனர். அங்கு அவர் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Leave A Reply

Your email address will not be published.