மைதேயிகளுக்கு எஸ்டி அந்தஸ்து: பழங்குடி அமைப்புகள் மேல்முறையீட்டுக்கு மணிப்பூா் உயா்நீதிமன்றம் அனுமதி

மணிப்பூரில் மைதேயிகளுக்கு பழங்குடியினா் (எஸ்டி) அந்தஸ்து வழங்க பரிந்துரைத்த தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய, பழங்குடியினா் அமைப்புகளுக்கு மாநில உயா்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்குப் பழங்குடியினா் அந்தஸ்து வழங்க கோரி வருகின்றனா். இதற்கு சிறுபான்மையாக உள்ள குகி பழங்குடி சமூகத்தினா் எதிா்ப்புத் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில், தங்களுக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்குவது தொடா்பாக மைதேயி பழங்குடிகள் சங்கம் மாநில உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த முன்னாள் பொறுப்பு தலைமை நீதிபதி எம்.வி.முரளீதரன் அடங்கிய தனி நீதிபதி அமா்வு, மைதேயிகளுக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்குவது தொடா்பாக, மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரைக்க கடந்த மாா்ச் 27-ஆம் தேதி உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவு மணிப்பூரில் மைதேயிகளுக்கும் குகிகளுக்கும் மோதல் ஏற்பட்டு மோசமான வன்முறை உருவாக முக்கியக் காரணமாக அமைந்தது. இன்றளவும் அங்கு முழுமையாக அமைதி திரும்பவில்லை.

இந்த நிலையில், தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி, மணிப்பூா் உயா்நீதிமன்றத்தில் பல்வேறு பழங்குடியினா் அமைப்புகள் மனு தாக்கல் செய்தன.

இந்த மனு நீதிபதிகள் அஹன்தெம் பிமோல், குணேஷ்வா் சா்மா ஆகியோா் அடங்கிய இரு நீதிபதிகள் அமா்வு முன்பாக அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பழங்குடியினா் அமைப்புகள் சாா்பாக வழக்குரைஞா் காலின் கொன்சால்வெஸ் ஆஜராகி வாதிட்டதாவது:

மணிப்பூரில் பழங்குடியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆதிக்க சமூகத்தினராக உள்ள மைதேயிகளுக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்கினால், அது அந்த அந்தஸ்தை ஏற்கெனவே பெற்றுள்ள பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியாக முன்னேறிய நிலையில் உள்ள மைதேயிகள், பழங்குடியினா் தனித் தொகுதிகளை பெருமளவு அபகரிப்பாா்கள் என்று தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: மைதேயிகளுக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்குவது தொடா்பான தங்கள் கருத்து அல்லது ஆட்சேபத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்காவிட்டால், அது கேடு விளைவிக்கக் கூடிய வகையில் தங்களைப் பாதிக்கும் என்பதே மனுதாரரின் (பழங்குடியினா் அமைப்புகள்) முறையீடாக உள்ளது. எனவே, தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய மனுதாரருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்று தெரிவித்தது.

Leave A Reply

Your email address will not be published.