ஐ.தே.க. மாநாட்டில் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்களுக்கு அடியோடு ‘வெட்டு’ – உரையாற்ற வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கடும் விமர்சனம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாட்டில் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்களுக்கு உரையாற்ற வாய்ப்பு வழங்கப்படாமை கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்று நடைபெற்றது.

மாநாட்டில் வரவேற்புரையை கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க ஆற்றினார். மாநாட்டு கூட்ட யோசனைய அறிவித்து பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார உரையாற்றினார்.

அத்துடன் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, தவிசாளர் வஜிர அபேவர்தன, உப தலைவர் அகில விராஜ் காரியவசம், தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க ஆகியோருக்கும் உரையாற்ற நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் வந்த அமைச்சர்களான மனுஷ நாணயக்கார, ஹரின் பெர்னாண்டோ ஆகியோரும் மாநாட்டில் உரையாற்றினர்.

எனினும், தமிழ், முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர்கள் உரையாற்றவில்லை.

வழமையாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக்கூட்டம், மாநாடுகளில் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு உரையாற்ற வாய்ப்பளிக்கப்படும். ஆனால், இந்த மாநாட்டில் நேரம் வழங்கப்படவில்லை. குறைந்தபட்சம் தமிழ்மொழியில் உரையாற்றக்கூடிய ஒருவருக்காவது வாய்ப்பளித்திருக்கலாம் எனக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

“இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்கக்கூடிய கட்சிதான் ஐக்கிய தேசியக் கட்சி. அதன் தலைவர் தற்போதைய ஜனாதிபதி முற்போக்கு சிந்தனை உடையவர். அப்படி இருக்கையில் தமிழ் பேசும் உறுப்பினர்களுக்கு உரையாற்ற வாய்ப்பு வழங்கப்படாமை வேதனையளிக்கின்றது.” – எனவும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.