முல்லைத்தீவில் மனைவியை கொலை செய்து விட்டு, கொழும்பு சென்ற கணவன் கைது

முல்லைத்தீவு- நீராவிப்பிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் பெண்ணொருவரின் சடலம் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சடலம் இன்றையதினம் (24.10.2023) மீட்கப்பட்டுள்ளது.

 புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த கீதா என்னும் 23 வயதுடைய பெண் ஒருவர் முள்ளியவளை குமாரபுரத்தை சேர்ந்த 23 வயதுடைய ஆண் ஒருவரை திருமணம் முடித்து நீராவிபிட்டி கிழக்கு பகுதியிலுள்ள வாடகை வீடொன்றில் கடந்த மூன்று வாரமாக வசித்து வந்துள்ளனர்.

குறித்த இளம் குடும்பபெண் தொலைபேசியில் தனது தாயாரிடம் நாளாந்தம் உரையாடுவதாகவும் கடந்த 21.10.2023 திகதிக்கு பின்னர் மகளின் தொலைபேசி துண்டிக்கப்பட்டிருந்ததாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.


இதனையடுத்து தாயார் நேற்றையதினம் 23.10.2023 மகளும் மருமகனும் வசிக்கும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர்கள் தங்கி இருந்த வீட்டின் பின்புறம் புதிதாக மண்ணால் நிரப்பட்ட குழி ஒன்று இருப்பதை அவதானித்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த பெண்ணின் தாயார் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இந்த முறைப்பாட்டை தொடர்ந்து தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று அகழ்வு பணியினை முன்னெடுத்திருந்தனர்.

இதனையடுத்து குறித்த இளம் குடும்பபெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டு வீட்டின் பின்புறத்தில் புதைக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெண்ணின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கணவரை கொழும்பு வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மனைவி கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.