தமிழ்க் கூட்டமைப்பின் அனைத்து எம்.பிக்களும் பதவி துறக்க வேண்டும் – ஆனந்தசங்கரி வலியுறுத்து.

“தமிழர்களின் வாக்குகளைக் கொள்ளையடித்து நாடாளுமன்றம் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாகத் தமது பதவிகளை இராஜிநாமா செய்ய வேண்டும். இதுவே காலத்தின் கட்டாயமும் தேவையுமாகும்.”

இவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்ய வேண்டும் என்று சுமந்திரன் எம்.பி. கேட்டுள்ளார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இதையடுத்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையைச் சேர்ந்த சட்டத்தரணி வி.தவராசா, இரா.சம்பந்தனுக்கு எழுதிய கடிதத்தில், “சம்பந்தன் வளர்த்த கடா மார்பில் பாய்ந்து விட்டது” என்று சுமந்திரன் மீது குற்றஞ்சாட்டியிருந்தார்.

இது தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அமரர்களான தந்தை செல்வா, அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் ஆகியோரால் தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சிதைத்து 2004 ஆம் ஆண்டு கூட்டணியில் வளர்க்கப்பட்ட சம்பந்தன் வளர்த்த கடாவாக மட்டுமல்ல ஓநாயாகவும் மாறி வரலாற்றுத் துரோகம் செய்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணிக்குச் செய்த துரோகம் தற்போது சம்பந்தனுக்குத் திரும்பி விட்டது.

ஆகையால் சம்பந்தன் மட்டுமல்ல 2004ஆம் ஆண்டு துரோகத்தனத்தால் தமிழர்களின் வாக்குகளைக் கொள்ளையடித்து நாடாளுமன்றம் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாகத் தமது பதவிகளை இராஜிநாமா செய்யவேண்டும். இதுவே காலத்தின் கட்டாயமும் தேவையுமாகும்.

அதுமட்டுமல்ல அழிந்துபோன தமிழர்களின் ஜனநாயக மரபைக் கட்டிக்காப்பதற்கும் தமிழ் மக்களின் உண்மையான அபிலாஷைகளை மீண்டும் நம்பிக்கையோடு கட்டியெழுப்பவதற்கும் இவர்கள் அனைவரும் இராஜிநாமா செய்ய வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.