கொழும்பில் இன்று ‘நாம் 200’ நிகழ்வு! – ரணில், நிர்மலா உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்பு.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் மலையக மக்களுக்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘நாம் 200’ நிகழ்வு இன்று மாலை 4 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஆரம்பமாகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட இந்திய அரசின் பிரதிநிதிகள், தமிழக அரசியல் பிரமுகர்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் எனப் பலரும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர். இந்திய நிதி அமைச்சர் பிரதம அதிதியாகப் பங்கேற்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் ஜீவன் தொண்டமான் வரவேற்புரையை நிகழ்த்தவுள்ளார் . மலையக கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களைப் பிரதிபலிக்கும் வகையில் கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. ‘நாம் 200’ ஐ முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.
இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்குப் பெரும் பலமாகவுள்ள மலையக மக்களின் 200 வருட கால வரலாற்றையும், நாட்டுக்காக அம்மக்கள் செய்த தியாகங்களையும் நினைவு கூரும் வகையிலேயே அரச அங்கீகாரத்துடன் இந்த நிகழ்வு இடம்பெறுகின்றது.