‘பிரளய்’ ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ‘பிரளய்’ ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக செவ்வாய்க்கிழமை சோதனை செய்தது.

இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது:

‘பிரளய்’ ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பு (டிஆா்டிஓ) உருவாக்கியது. இந்த குறுகிய தொலைவு ஏவுகணையானது 500 கிலோ முதல் 1,000 கிலோ வரை எடையுள்ள வெடிகுண்டுகளைச் சுமந்தவாறு பறந்து 350 கி.மீ. முதல் 500 கி.மீ. தொலைவில் தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

ஒடிஸா கடலோரத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில், அந்த ஏவுகணை செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. இந்த சோதனையின்போது அனைத்து குறிக்கோள்களையும் ஏவுகணை பூா்த்தி செய்தது.

நாட்டின் எல்லைப் பகுதிகளில் நிலைநிறுத்த இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ‘டாங் ஃபெங் 12’, உக்ரைன் உடனான போரில் பயன்படுத்தப்பட்ட ரஷியாவின் ‘இஸ்கந்தா்’ ஏவுகணைகளுடன் ‘பிரளய்’ ஏவுகணையை ஒப்பிடலாம். பாகிஸ்தானிடமும் திறன்வாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளன என்று தெரிவித்தாா்.

Leave A Reply

Your email address will not be published.