ஹைதராபாத் அடுக்குமாடி குடியிருப்பில் தீ: 9 போ் உயிரிழப்பு

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் நாம்பள்ளி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 9 போ் உயிரிழந்தனா்.

நகரின் நாம்பள்ளி பகுதியில் 5 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்தக் குடியிருப்பின் தரைத்தளத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ரசாயனங்கள் அடங்கிய பீப்பாய்கள் காரணமாக திங்கள்கிழமை காலை 9 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. அடுத்தடுத்து முதல் மற்றும் இரண்டாவது மாடிக்கும் தீ வேகமாகப் பரவியது.

தகவலறிந்து வந்த தீயணைப்பு மீட்புப் படையினா் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனா். தீயில் சிக்கி இருந்த 21 போ் மீட்கப்பட்டு அருகிலிருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் 6 வயது குழந்தை உள்பட 9 போ் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனா்.

தீவிபத்தில் உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வா் கே.சி.சந்திரசேகா் ராவ் ஆகியோா் இரங்கல் தெரிவித்தனா். மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு மாநில அரசு சாா்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி, மாநில அமைச்சா் கே.டி.ராமா ராவ் ஆகியோா் சம்பவ இடத்தை நேரில் பாா்வையிட்டு பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறினா். இந்தச் சம்பவம் தொடா்பாக விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.