யுத்தம் இல்லாத சூழலில் பாதுகாப்பு அமைச்சுக்கு பெருமளவு நிதி எதற்கு? – நாடாளுமன்றில் கஜேந்திரகுமார் சீற்றம்.

போர் முடிந்து 15 வருடங்களுக்குப் பின்னரும் – யுத்தம் இல்லாத சூழலில் தொடர்ந்தும் நியாயப்படுத்த முடியாத அளவுக்கு பாதுகாப்பு அமைச்சுக்கு நிதி ஒதுக்கப்படுகின்றது என்றால் அதைப் பற்றியும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (23) பாதுகாப்பு அமைச்சு தொடர்பான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

“மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையில் நடைபெறுகின்ற மோதல் தொடர்பாக இரண்டு கிழமைகளுக்கு முன்பதாக இதே நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம் ஒரு போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், பலஸ்தீன மக்களுடைய பிரச்சினை பேச்சு ஊடாகத் தீர்க்கப்பட வேண்டும் என்றும் நிறைவேற்றப்பட்டது.

பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களோடு ஐ.நா.வுடைய செயலாளர் நாயகத்துக்கும் கடிதம் ஒன்று எழுதப்பட்டது. அந்தக் கடிதத்திலும் இங்கு நடைபெற்ற விவாதத்திலும் மிகத் தெளிவாக காஸாவில் நடைபெறுவது பலஸ்தீன மக்களின் இனப்படுகொலை என்ற விடயம் வலியுறுத்தப்பட்டிருந்தது. அங்கு நடைபெறுவது இனப்படுகொலை என்பதை நியாயப்படுத்துவதற்குரிய பல அம்சங்கள் பட்டியிலிடப்பட்டிருந்தது. அந்தப் பட்டியலில் கூறப்பட்ட விடயங்கள் அனைத்தும் இலங்கையில் வடக்கு, கிழக்கில் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் நடைபெற்றிருந்தவையாகும்.

இங்கு இனப்படுகொலையை செய்வித்த கருவி இந்த முப்படைகளும் பொலிசும் ஆகும். இதனைப் பற்றித் தான் இன்று விவாதிக்கின்றோம். அந்த இனப்படுகொலை செய்தவர்கள் இன்று வடக்கு, கிழக்கில் நிலைகொண்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் 1:14 என்றும், வன்னியில் 1:4 ஆக, மிகவும் ஒரு நெருக்கடியைக் கொடுக்கக்கூடிய அளவுக்கு ஆயதப்படைகளின் பிரசன்னம் இருக்கக்கூடிய நிலையில், எங்களைக் கொலை செய்தவர்களே எங்களுக்கு அருகில் இருப்பதை எம்மால் அனுமதிக்க முடியாதுள்ளது.

ஆகவே தான் – இந்த இனப்படுகொலை தொடர்பாக முழுமையான பொறுப்புக்கூறல் நடைபெற்று, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படுகின்ற வரைக்கும் இராணுவத்தை வடக்கு கிழக்கில் இருந்து அகற்ற வேண்டும் என்ற விடயத்தை, அரச தரப்பில் ஒட்டுண்ணிகளாக இருக்கக்கூடிய தமிழ் உறுப்பினர்களைத் தவிர்ந்த மற்றய அனைத்து தரப்பினரும் கோரிக்கையாக முன்வைத்து வருகின்றனர். இதிலுள்ள யாதார்த்தத்தை விளங்கிக் கொள்ளாமல் – போர் முடிந்து 15 வருடங்களுக்குப் பின்னரும் – யுத்தம் இல்லாத சூழலில் தொடர்ந்தும் நியாயப்படுத்த முடியாத அளவுக்கு பாதுகாப்பு அமைச்சுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது என்றால் அதைப்பற்றியும் ஆழமாக சிந்திக்க வேண்டும்.

இன்று இலங்கை வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்ற சூழலிலே – மொத்த வரவு – செலவுத் திட்டத்தில் 11 வீதம் பாதுகாப்புக்கு ஒதுக்கப்படுகின்றது. அத்துடன், பொதுமக்கள் பாதுகாப்புக்கு 3.6 வீதமுமாக 14.6 வீதம் பாதுகாப்புக்கு ஒதுக்கப்படுகின்றது. சுகாதாரத்துகு 10.6 வீதம் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்விக்கு 6.1 வீதம். வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் உற்பத்தியை அதிகரித்து ஏற்றுமதியையும் அதிகரிக்க வேண்டும். உற்பத்தியையும் ஏற்றுமதியையும் அதிகரிப்பதற்குரிய மிக முக்கியமானது கைத்தொழில், விவசாயம், மீன்பிடி என்பவையாகும்.

கைத்தொழிலுக்கு 0.2 வீதமும், விவசாயத்துக்கு 2.6 வீதமும், மீன்பிடிக்கு 0.18 வீதமும் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கை ஒரு தீவு. தீவை சுற்றிவர மீன்பிடி செய்யக்கூடிய நிலையிருந்தும் கூட, இந்தப் பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளிவருவதற்கு 0.18 வீதம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு தூரம் நெருக்கடிகள் இருக்கும் போது பாதுகாப்பு அமைச்சுக்கு இவ்வளவு நிதி ஒதுக்கப்படுவதற்கு காரணம் என்ன? யுத்தம் இன்று இல்லை. இங்கிருக்கக்கூடிய எவரும் நாட்டைப் பிரிப்பதற்கு கோரவுமில்லை. கோரவும் முடியாது. அப்படியானால் என்ன காரணம்?

காரணமென்னவெனில் – நீங்கள் தமிழ் மக்களுடைய உரிமைகளை வழங்கத் தயாரில்லை என்றால் – தொடர்ந்தும் தமிழ் மக்களது உரிமைகளைப் பறித்து வைத்திருக்கப் போகிறீர்களாக இருந்தால் – தமிழ் மக்கள் கொந்தளிப்பார்கள் என்ற பயத்திலே அந்த மக்களை அடக்கி ஒடுக்கி வைத்திருக்க வேண்டிய தேவை உங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. இதன் காரணமாகவே யுத்தம் முடிந்து 15 வருடங்களுக்குப் பிறகும் நீங்கள் இந்த செயற்பாட்டை தொடர்கிறீர்கள். அதுமட்டுமல்லாமல் இந்த மக்களை எவ்வளவுக்கு நசுக்க முடியுமோ, அவர்களை நசுக்கி, இந்த மக்கள் இந்த தீவை விட்டு வெளியேறுகின்ற நிலையை ஏற்படுத்துவதற்கும் தான் நீங்கள் சிந்திக்கிறீர்கள்.

தமிழ் மக்களின் பொருளாதாரம் 30 வருடங்களுக்கு மேல் பின்தங்கிய நிலையில் இருக்கின்ற நிலையிலும், அந்த மக்களுடைய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு போர் முடிந்து 15 வருடங்களாகியும் நீங்கள் எதுவுமே செய்யவில்லை. எதுவுமே செய்யாதது மட்டுமல்லாமல், தமிழ் மக்களை மோசமான நிலமைக்குத் தள்ளி அவர்கள் உங்களைக் கெஞ்சுகின்ற நிலைமையை உருவாக்கி, அந்த மக்கள் உரிமைகளைப் பற்றி சிந்திக்காமல் இருப்பதற்காக அவர்களை வறுமையாளர்களாக உருவாக்கி – இராணுவமயமாக்கலுக்குள் உள்வாங்கி, தமிழ்மக்களை முழுமையாக அடிமைகளாக்கி வைத்திருக்கின்ற நிலையையே உருவாக்க முயல்கிறீர்கள்.

இன்று வேலைவாய்ப்புக்கள் இல்லை. மக்கள் சீவிப்பதற்கு வழியில்லாத நிலையை ஏற்படுத்தி, இராணுவத்தின் மூலமாக கொடுப்பனவுகளை வழங்கி உள்வாங்கப்படுகிறார்கள். உதாரணமாக – இன்று முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சிஎஸ்டி தரப்பு முப்பதாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குகின்றது. ஆனால் கல்வியமைச்சுக்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆறாயிரம் மட்டுமே வழங்கப்படுகின்றது. இன்று இருக்கும் பொருளாதார நெருக்கடியில் முப்பதாயிரத்தை மக்கள் விரும்புவார்களா? அல்லது ஆறாயிரத்தை மக்கள் விரும்புவார்களா? நீங்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு இவ்வளவு தூரம் பணம் ஒதுக்குவதே அந்த மக்களை இந்தப் பாதுகாப்பு அமைச்சுக்குள் உள்வாங்கி, அவர்களை உங்களுடைய தேவைகளுக்கு பயன்படுத்தி, அடிமைகளாக்கி, அவர்களை உரிமைசார் பயணங்களில் ஈடுபடமுடியாதவாறு ஆக்கி, உங்களது எடுபிடிகளாகப் பாவிப்பதற்கு திட்டமிட்டு செயற்படுகிறீhகள்.

அதேநேரம் – இந்த மக்கள் இலங்கைத் தீவிலிருந்து வெளியேறக் கூடிய நிலையை இன்னொரு வகையில் உருவாக்குகிறீர்கள். கடற்படையை எடுத்துக்கொண்டால் – வடக்கு கிழக்கில் இரண்டு மூன்று கிலோமீற்றர்களுக்கு ஒரு கடற்படை முகாம் இருக்கிறது. ஆனால் – இவ்வளவு பாரிய இருப்பை கடற்படை வைத்திருந்தும் கூட வெளிநாட்டிலிருந்து வடக்கு, கிழக்கு கடற்பரப்புக்குள் நுழைந்து, ஒரு கிலோமீற்றர் தூரத்துக்கு வந்து கடற்தொழில் செய்து, இங்குள்ள தமிழர்களின் சொத்துக்களை அழித்துவிட்டு செல்வதற்கு நீங்கள் அனுமதிக்கிறீர்கள். ஆயிரக்கணக்கில் அவர்கள் வந்து அழிவுகளைச் செய்துகொண்டிருக்கின்ற நிலையில் – மாதத்தில் ஐந்து படகுகளை மட்டும் கடமைக்காக பிடித்து விட்டு பின்னர் விட்டுவிடுகிறீர்கள். இது திட்டமிட்டே நடைபெறுகிறது. இந்த விடயம் தொடர்பாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாங்கள் கேட்டிருந்தோம். அந்த ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இலங்கையின் மீன்பிடி அமைச்சர் . அங்கு கடற்படையின் பொறுப்பதிகாரியும் வந்திருந்தார். இந்த நிலைமையைக் கேட்டபோது – கடற்படைக்கு அவர்களுக்கு கிட்டப் போய் பிடிப்பதற்கு பயம். அந்தளவுக்கு எண்ணிக்கையில் கூடிய ஆட்களாக வெளியாட்கள் வருகிறார்கள் என்று மீன்பிடி அமைச்சர் கடற்படை அதிகாரியின் கருத்தாக கூறுகிறார்.

இது நம்பக்கூடிய கதையா? உண்மையில் பயமென்றால் நீங்கள் ஏன் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து, மூன்று கிலோ மீற்றருக்கு ஒரு கடற்படை முகாம் அமைத்து இருக்கிறீர்கள்? அப்படியென்றால் இங்கு கடற்படை இருக்கத் தேவையே இல்லையே. என்ன தேவைக்காக வடக்கு கிழக்கில் வைத்திருக்கிறீர்கள்? இந்த மக்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியாமல் முழுமையாக கடற்கரைகளை கடற்படையினர் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலையிலும் பாதுகாப்பு வழங்க முடியாவிட்டால், எதற்காக கடற்படையினரை இங்கு வைத்திருக்கிறீர்கள்? இதற்கு காரணம் – ஒரு பக்கம் தமிழ் மக்களின் காணிகளைப் பறித்து, இருக்க முடியாத சூழலை உருவாக்கி, வாழ்க்கையை நடத்த முடியாத அளவுக்கு அவர்களுக்கு நிலைமையை ஏற்படுத்தி, தமது தொழிலையும், காணிகளையும் விட்டு வெளியிடங்களுக்கு போவதற்குரிய நிலையை திட்டமிட்டு உருவாக்குவதும், அதேநேரம் – வெளியிடங்களில் இருந்து அத்துமீறி வருபவர்களையும் அனுப்பி தொடர்ந்தும் தொழில் செய்ய முயற்சிக்கின்ற தமிழ் மக்களின் சொத்துக்களையும், உபகரணங்களையும் அழித்து அவர்கள் கடற்தொழில் செய்யமுடியாத நிலைமையையும் ஏற்படுத்துவது தான் உங்களின் நோக்கமாக இருக்கிறது.

இதேபோல் – வர்த்தகத்தை எடுத்துக் கொண்டாலும் – சிகை அலங்கரிப்பு நிலையங்கள், மரக்கறி விற்பனைகள், உணவு விடுதிகள், வியாபாராம் அனைத்திலும் போட்டியிடுகிறீர்கள். ஒரு அரசு தனது கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய முப்படைகளுக்கும் பாரிய நிதி ஒதுக்கி அந்த நிதியூடாக செயற்படுத்துகின்ற தன்மையோடு பொதுமக்களால் போட்டியிட முடியுமா? பொதுமக்களால் அது முடியாது. இன்று கட்டுமானப் பணிகளைக் கூட அரசு தரப்பு, இராணுவத்திடம் கொடுக்கும் நிலையே இருக்கிறது. அப்படியானால் – பொதுமக்களின் நிலை என்ன? ஆகவே சகல வகைகளிலும் மக்களை நசுக்கி – தங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்க முடியாத நிலைமைகளை உருவாக்கி – அந்த மக்களை இந்த நாட்டை விட்டு வெளியேற்றுவது தான் உங்களின் உண்மையான நோக்கமாக இருக்கிறது. போனவருடமும் நான் குறிப்பிட்ட அதே விடயத்தையே நான் இம்முறையும் குறிப்பிடுகின்றேன்.

இது உங்களை கோபப்படுத்துவதற்குரிய விடயமல்ல. ஆனால் இந்தக் கோணத்தில் மக்கள் இதனைப் பார்த்து விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதனை கூறுகின்றேன். இலங்கை அரசின் ஒட்டு மொத்த கட்டுமானங்களில், இலங்கையின் பாதுகாப்பு அமைச்சுக்கு எதிராக தமிழ் மக்கள் தனத்துவமான வெறுப்பினை வைத்திருக்கிறார்கள். அதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த அமைச்சினுடைய செயற்பாடுகளால் தொடர்ந்தும் தமிழ் மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். தமிழ் மக்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களின் கௌரவத்தைப் பறித்து, அவர்களின் அடையாளங்களை அழித்து செயற்படுகின்ற உங்களின் இனவாத செயற்பாடுகள் தொடர்ந்தும் இருக்கும் நிலையில், தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக இருக்கக்கூடிய ஒரேவழி, முழுமையான சர்வதேச குற்றவியல் விசாரணையேயாகும். சர்வதேச குற்றவியல் விசாரணையை நடத்துவதன் ஊடாகவும் குற்றவாளிகளை இனங்கண்டு தண்டனை வழங்குவதூடாகவும் மட்டுமே அது அமையும். இதனாலேயே தொடர்ந்தும் பாதுகாப்பு அமைச்சுக்கு எதிராகவே நாம் வாக்களித்து வருகின்றோம். தொடர்ந்தும் எமது தமிழ் மக்களின் நீதிக்காகவும் நியாயத்துக்காகவும் ஒரு சர்வதேச பொறுப்புக்கூறலை நாங்கள் தொடர்ந்தும் வலியுறுத்திக்கொண்டே இருப்போம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.