எலிவளை நிபுணர்களின் உதவியால் தொடரும் மீட்புப் பணி!

சில்க்யாரா சுரங்கப்பாதையில் மீட்புப் பணிகள் 17-வது நாளாக நீடித்து வரும் நிலையில், சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க கையால் துளையிடும் பணி நடைபெற்று வருகிறது.

செவ்வாய்க்கிழமை காலை நுண் சுரங்கப்பாதை நிபுணர் கிறிஸ் கூப்பர் கூறுகையில், “இதுவரை 3 மீட்டர் கையால் துளையிடும் பணி மேற்கொள்ளப்பட்டு, மொத்தம் சுமார் 50 மீட்டர் வரை துளையிடும் பணிகள் நிறைவடைந்துள்ளன. தொழிலாளர்கள் மீட்கப்படும் காலத்தை நிர்ணயிக்க முடியாது, ஆனால் குறைந்தபட்ச தடைகள் மட்டும் ஏற்படும் என்று நம்புவோம், பிரார்த்தனை செய்வோம்” என்று அவர் கூறினார்.

சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, இடிபாடுகளிடையே 80 செ.மீ. விட்டம் கொண்ட குழாயை 60 மீட்டா் தொலைவுக்குச் செலுத்தி தொழிலாளா்களை மீட்பதற்கான பணிகள் தொடங்கி நடந்து வந்தன. குழாயைச் செலுத்துவதற்கு துளையிடப்பட்ட பாதையில் இரும்புக் கம்பிகள் குறுக்கிட்டதால் மீட்புப் பணிகள் அவ்வப்போது நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டன. துளையிடும் 25 டன் எடை கொண்ட ஆகா் இயந்திரம் நிறுவப்பட்டுள்ள கான்கிரீட் தளத்தில் விரிசல் ஏற்பட்டதால், மீட்புப் பணிகள் தொடா்வதில் சிக்கல் நிலவியது.

கான்கிரீட் தளத்தில் உண்டான விரிசல் சீா் செய்யப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டன. தொடங்கிய ஒரு மணிநேரத்தில் ஆகா் இயந்திரத்தின் பிளேடுகள் கான்கிரீட்-எஃகு கம்பி இடிபாடுகளில் சிக்கிக் கொண்டன. இதனால் கிடைமட்டமாக குழாய் செலுத்தும் மீட்புப் பணிகள் முழுவதுமாக முடங்கியது.

மீதமுள்ள 10-12 மீட்டா் தொலைவுக்கு பணியாளா்களே நேரடியாக குழாயைச் செலுத்துவதற்கு, இயந்திரத்தின் உடைந்த பிளேடை அகற்றுவது அவசியமானது. இதற்காக ஹைதராபாதிலிருந்து வரவழைக்கப்பட்ட இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் கட்டுமானப் படைப்பிரிவைச் சோ்ந்த பொறியாளா்கள் குழு வீரா்கள், இயந்திரத்தின் உடைந்த முனைப் பகுதிகளை அகற்றினா்.

இதனிடையே, மலையின் மேல் பகுதியிலிருந்து செங்குத்தாகத் துளையிட்டு 86 மீட்டருக்கு குழாயைச் செலுத்தி தொழிலாளா்களை மீட்பதற்கான மாற்றுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டு, துளையிடும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. எந்த இடையூறும் இல்லாத சூழலில், 100 மணிநேரத்தில் (4 நாள்கள்) தொழிலாளா்களை அடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடிபாடுகளில் துளையிட்டு ஏற்கெனவே பதிக்கப்பட்டுள்ள 80 செ.மீ. விட்டம் கொண்ட குழாய் வழியாக ஒவ்வொருவராக சென்று, அங்கு குவிந்துள்ள மண் மற்றும் இடிபாடுகளை அகற்றுவா். சுரங்கத் தொழிலில் இவா்கள் ‘எலிவளை நிபுணர்கள்’ என்று அழைக்கப்படுகின்றனா்.

Leave A Reply

Your email address will not be published.