வாழ்நாள் சாதனையாளர் ‘வடமராட்சி தில்லைநாதன்’ – அ.சா. அரியகுமார் (ஓய்வுநிலை அதிபர்).

யாழ்ப்பாணம், வடமராட்சி – புலோலியைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் சின்னத்துரை தில்லைநாதனுக்கு இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும், பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இணைந்து இன்று கொழும்பில் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கிக் கெளரவிக்கின்றன. தில்லைநாதனுக்கான இந்தக் கெளரவிப்பு பாராட்டுக்குரியது.

‘வடமராட்சி தில்லைநாதன்’ என அழைக்கப்படும் மூத்த ஊடகவியலாளர் சின்னத்துரை தில்லைநாதன் 50 ஆண்டுகளுக்கு மேலாகத் தனது ஊடகப் பணியைச் சிறப்புற ஆற்றி வாசகர்களின் மனங்களில் நிறைந்துள்ளார்.

அக்காலங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் – இந்திய அரசு யுத்தம், தமிழீழ விடுதலைப்புலிகள் – இலங்கை அரசு யுத்தம், சுனாமிப் பேரலை அனர்த்தம் ஆகியன இடம்பெற்று மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்த காலம். தனது பிராந்தியத்தில் அக்காலங்களில் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தையும் உடனுக்குடன் தான் பணியாற்றிய ஊடகங்கள் மூலம் வெளிக்கொணர அவர் தவறியதில்லை.

அவர் வெளிக்கொண்டு வந்த பல செய்திகள் சர்வதேசம் வரை பரவின

அதுமட்டுமல்ல மக்கள் எதிர்நோக்கிய அபிவிருத்தி சார்ந்த பிரச்சினைகளையும் வெளிக்கொணர்ந்து அவற்றுக்கு மக்கள் தீர்வைப் பெறுவதற்கும் உதவியுள்ளார்.

தில்லைநாதன், கண்டியிலிருந்து அக்காலத்தில் வெளிவந்த ‘செய்தி’ வார இதழில் 1968 ஆம் ஆண்டு தனது ஊடகப் பணியை ஆரம்பித்தார். அதே ஆண்டே யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘ஈழநாடு’ பத்திரிகையில் செய்தியாளரானார். பின்னர் ‘வீரகேசரி’ பத்திரிகையின் பிராந்திய செய்தியாளராக அரை நூற்றாண்டாகத் தனது ஊடகப் பணியைத் தொடருகின்றார்.

அதேவேளை, ‘தினபதி’, ‘சிந்தாமணி’, ‘தினகரன்’, உதயன்’, ‘சுடர் ஒளி’, ‘காலைக்கதிர்’ ஆகிய பத்திரிகைகளிலும் பிராந்திய செய்தியாளராகத் தில்லைநாதனின் ஊடகப் பணி தொடர்ந்தது.

பெரும்பாலான தமிழ்ப் பத்திரிகைகளில் தில்லைநாதன் பிராந்திய செய்தியாளராகப் பணியாற்றியுள்ளார் – பணியாற்றுகின்றார். அவரின் உன்னத ஊடகப் பணிக்கு இது சிறந்த சான்றாகும்.

மாணவனாக இருந்தபோது வாசிப்பின் மீது இருந்த ஆர்வமே ஊடகத்துறைக்கு அவரை இழுத்துச் சென்றது. தான் மட்டுமல்ல இளம் வயதினரையும் இத்துறையில் ஆர்வம் காட்டச் செய்து, அவர்களைப் பத்திரிகைகளில் செய்தியாளர்களாக இணைவதற்கும் வழிகாட்டியவர். அவர்கள் சிறந்த ஊடகவியலாளர்களாகத் திகழ்ந்து பல பத்திரிகைகளில் பணியாற்றினார்கள் – பணியாற்றுகின்றார்கள்.

1970 – 1977 காலப் பகுதியில் வடமராட்சியில் பல கிராமங்கள் கைவிடப்பட்டு அபிவிருத்தியில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்டன. கல்வி, வீதி, போக்குவரத்து, சுகாதாரப் பிரச்சினைகள் நிறைந்த பகுதியாகவே வடமராட்சி கிழக்குப் பிரதேசம் காணப்பட்டது. அப்பிரதேசத்தில் 14 பாடசாலைகள் தரம் 5 அல்லது தரம் 6 வரை உள்ள பாடசாலைகளாகவே காணப்பட்டன. மூன்று பாடசாலைகள் மட்டுமே ஜி.சீ.ஈ. சாதாரண தரம் வரை வகுப்புக்கள் உள்ளதாக இருந்தன. இதனால் அப்பிரதேசத்தில் ஏராளமான மாணவர்கள் தமது ஆரம்ப வகுப்புகளுடன் தமது கல்வியை நிறுத்தி இடைவிலகிச் செல்கின்ற நிலை காணப்பட்டது. இந்த அவலநிலை பற்றிய செய்திகளை எல்லாம் அப்பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கிணங்க பத்திரிகைகளில் வெளியிட்டு அப்பிரச்சினைக்குப் படிப்படியாகத் தீர்வு பெற உதவினார். அரச பஸ் சேவை மட்டும் அப்பிரதேசத்தில் இடம்பெற்றது. அச்சேவையில் நடைபெறும் தவறுகளையும் அவர் பத்திரிகைகள் மூலம் வெளிக்கொணரத் தவறியதில்லை.

முன்னாள் பருத்தித்துறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரத்தினம் அப்பிரதேசத்துக்குச் செல்கின்றபோது அவருடன் தானும் சென்று அப்பிரதேச நிலைமைகளைக் கண்ணுற்று அதனைப் பத்திரிகைகள் மூலம் வெளிக்கொணரத் தவறியதில்லை.

1987 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இந்திய இராணுவத்தினருக்கும் இடையில் போர் மூண்டபோது வடமராட்சியில் இடம்பெற்ற பல்வேறு தாக்குதல் சம்பவங்களைத் தான் சார்ந்திருந்த பத்திரிகைகள் மூலம் வெளியே கொண்டு வந்தார். அக்காலத்தில் இடம்பெற்ற வல்வைப் படுகொலை மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல் போன்ற சம்பவங்களைச் செய்தியாக வாசகர்களுக்கு அறியத்தந்தார்.

இலங்கை இராணுவத்தால் 1987 ஆம் ஆண்டில் வடமராட்சியில் மேற்கொள்ளப்பட்ட ‘ஒப்பரேசன் லிபரேசன்’ தாக்குதலின்போது மக்களின் இடம்பெயர்வு அவலங்கள் சம்பந்தமான செய்திகளையும் பத்திரிகைகள் மூலம் வெளிக்கொணரச் செய்தார்.

அதன்பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையே இடம்பெற்ற மோதலின்போதும் வடமராட்சியில் இடம்பெற்ற சம்பவங்களையும் செய்தியாக வெளிக்கொணர அவர் தவறவில்லை.

1991 ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப்புலிகளால் ஆனையிறவுப் படை முகம் மீது மேற்கொள்ளப்பட்ட ஆகாய கடல்வெளித் தாக்குதல், வெற்றிலைக்கேணியில் இராணுவம் தரையிறக்கம் தொடர்பான செய்திகளை மோதல் நடைபெற்ற காலப் பகுதியில் தினமும் பத்திரிகைகளில் செய்தியாக வெளிவர உழைத்தார்.

2004ஆம் ஆண்டு இலங்கையில் சுனாமிப் பேரவலம் ஏற்பட்டபோது வடமராட்சியில் தொண்டமானாறு தொடக்கம் கட்டைக்காடு வரையான கரையோரக் கிராமங்கள் கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டதையும், ஆயிரக்கணக்கான மக்கள் கடல் அலையால் காவுகொள்ளப்பட்டதையும், காயமடைந்த சம்பவங்களையும் இவர் செய்தியாக வெளிக்கொண்டு வந்தார்.

இவர் நீதிமன்றச் செய்திகளையும் பத்திரிகைகளில் தொடராக வாசகர் அறிய வெளிக்கொணர்ந்தார். வடக்கில் இடம்பெற்ற கொலை வழக்குகளை நீதிமன்றம் சென்று சேகரித்து வழங்கி வந்தார். பருத்தித்துறையில் மாணவி ஒருவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு ஆனைவிழுந்தான் சுடலைக்கு அண்மையில் வீசப்பட்ட கமலம் கொலை வழக்கு, செம்மணி கிருஷாந்தி கொலை வழக்கு, பருத்தித்துறை திக்கமுனை மைதானத்தில் இடம்பெற்ற ‘காணிவேல்’ நிகழ்வின்போது பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட தாக்குதல் பற்றிய வழக்கு ஆகியவற்றைப் பத்திரிகைகளில் தொடராக வர உழைத்தார். அத்துடன் வடமராட்சி கிழக்கு – மணற்காட்டில் குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை ஆகியோர் கைது செய்யப்பட்ட செய்தியையும் முதன்முதலாகப் பத்திரிகைகளில் வெளிக்கொணர்ந்தார்.

இவர் செய்தியாளராகக் கடமையாற்றிய காலத்தில் பெரும் பகுதி மிக இக்கட்டான காலப் பகுதியாகும். ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் மிகப் பெரிய சவால்களை எதிர்நோக்கியிருந்த காலம். அக்காலப் பகுதியில் துணிவுடனும் பக்கச்சார்பின்றியும் செய்திகள் வெளிவர உழைத்தார். தொழில்நுட்ப வசதிகள் எதுவுமற்ற காலப் பகுதியில் செய்திகளைப் பத்திரிகை நிறுவனங்களுக்கு நேரில் கையளித்தும், தபால் மூலம் அனுப்பியும் பத்திரிகைகளில் அவை வெளிவர நடவடிக்கை எடுத்தார்.

ஊடகத்துறையில் 50 ஆண்டுகளுக்கு மேலாகத் தனது பணியைத் தொடரும் தில்லைநாதனுக்கு அவரது 73 ஆவது அகவையில் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்குவது பொருத்தமானதாக அமைந்துள்ளதுடன் அவரது பணியும் பாராட்டுக்குரியது.

Leave A Reply

Your email address will not be published.