”கருணைக் கொலைக்கு அனுமதியுங்கள்’’ பெண் நீதிபதி பரபரப்புக் கடிதம்

தன்னை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பெண் நீதிபதி ஒருவர் எழுப்பிய குரல் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான சமீபத்திய நிலைமை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அலகாபாத் உயர்நீதிமன்ற நிர்வாகத்திடம் இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, உத்தர பிரதேசம் மாநிலம் பாண்டா (BANDA) மாவட்டத்தைச் சேர்ந்த பெண் சிவில் நீதிபதி தான் சந்தித்து வரும் தொடர்ச்சியான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார். இந்த கடிதம் சமூக ஊடக வலை தளங்களில் பேசு பொருளாகியது. அவர், அந்த கடிதத்தில், பாண்டா மாவட்ட நீதிபதி தன்மீது தொடர்ச்சியான பாலியல் துன்புறுத்தல்களை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். மேலும், நீதிபதியின் கீழ் செயல்படும் இதர நீதித் துறை அலுவலர்களும் இந்த செயல்களுக்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.

மேலும், அவர் , ” இரவில் தனிமையில் வந்து சந்திக்க மாவட்ட நீதிபதி அழைப்பு விடுத்தாகவும், தன்னுடைய நேர்மை, கண்ணியம் ஆகியவற்றை கேள்விக்கு உட்படுத்தியதாககவும் தெரிவித்தார். இதுதொடர்பாக , கடந்த 2022ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டதாகவும், இதன்மீது எந்த அதிகாரப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், 2023ம் ஆண்டு ஜுலை உயர்நீதிமன்றத்தின் உள்ளக புகார்க் குழுவிடம் புகார் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் அக்குழு ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும், குற்றங்கள் விசாரிக்கப்பட்டு, குறைகள் தீர்க்கப்படும் வரை சசம்மந்தப்பட்ட மாவட்ட நீதிபதியை வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் கூறினார்.

தொடர்ச்சியான பாலியல் துன்புறுத்தல் செயல்களால் உளவியல் ரீதியான வலி, உடல் ரீதியான வலி என பல விதமான எதிர்மறை விளைவுகளுக்கு ஆளாக வேண்டியிருந்ததாகவும் தெரிவித்தார்.

அவர் கடிதத்தில்,” மேற்கொண்டு வாழ்வதில் எனக்கு விருப்பமில்லை. கடந்த ஒன்றரை வருடங்களில் நடை பிணமாக மாற்றப்பட்டேன். ஆன்மாவும் உயிரும் இல்லாத இந்த உடலைச் சுமந்து செல்வதில் எந்த பலனும் இல்லை. இனியும் வாழ்வில் ஏதேனும் நோக்கம் மிச்சமிருப்பதாய் தெரியவில்லை. எனது வாழ்க்கையை கண்ணியமான முறையில் முடித்துக் கொள்ள தயவுசெய்து அனுமதி தாருங்கள், ”என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான சமீபத்திய நிலைமை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அலகாபாத் உயர்நீதிமன்ற நிர்வாகத்திடம் இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.