ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் கனவை நிறைவேற்றிய காவல்துறை!

ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவனின் காவல் அதிகாரி கனவை ஐதராபாத் காவல்துறை அதிகாரிகள் நிறைவேற்றியுள்ளனர்.

ஆந்திரப்பிரதேச மாநிலம், குண்டூரைச் சேர்ந்த 7 வயது சிறுவன் மோகன் சாய்க்கு, கடந்த ஆண்டு அவர் படிக்கும் பள்ளியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது சிறுவனுக்கு ரத்த புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஐதராபாத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காவல் அதிகாரி ஆக வேண்டும் என்ற சிறுவனின் ஆசையை மருத்துவர்கள், தொண்டு அமைப்பு ஒன்றிடம் தெரிவித்தனர். இதையடுத்து, ஹைதராபாத்தில் உள்ள பசவதாரகம் கேன்சர் இன்ஸ்டியூட்டில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சிறுவன் மோகன் சாய்க்கு போலிஸ் அதிகாரியாக வேண்டும் என்ற ஆசை இருப்பதை அறிந்து கொண்ட பசவதாரகம் கேன்சர் இன்ஸ்டிடியூட் ஊழியர்கள், தனியார் அறக்கட்டளை மூலம், சிறுவன் குறித்து காவல்துறையினரிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் அந்த சிறுவனை ஒரு நாள் போலிஸ் அதிகாரியாக மாற்றிக்கொள்ள பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தினர் ஒப்புகொண்டனர்.

இதையடுத்து, ஒரு நாள் காவல் அதிகாரியாக சிறுவனுக்கு சீருடை அணிவிக்கப்பட்டு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் சிறுவன் மோகன் சாயை காவல் அதிகாரிகளுக்கான இருக்கையில் அமர செய்து, காவல் நிலையத்தின் செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்தனர். தொடர்ந்து சிறுவனுக்கு பரிசு பொருட்களை வாங்கி கொடுத்த அதிகாரிகள், சிறுவனை மீண்டும் புற்று நோய் சிகிச்சை மையத்துக்கே அனுப்பி வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.