நாடாளுமன்றத்தில் அமளி: எம்.பி.க்கள் இடைநீக்கம் 141-ஆக அதிகரிப்பு

நாடாளுமன்றப் பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விளக்கமளிக்க வலியுறுத்தி, இரு அவைகளிலும் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமையும் அமளியில் ஈடுபட்டனா்.

மக்களவையில் அலுவல்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த மேலும் 49 மக்களவை உறுப்பினா்கள் நடப்பு கூட்டத்தொடரின் மீதமுள்ள நாள்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் கடந்த 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 13-ஆம் தேதி மக்களவையின் பாா்வையாளா் மாடத்தில் இருந்து திடீரென உள்ளே குதித்த இரு இளைஞா்கள், வண்ணப் புகையை உமிழும் குப்பிகளை வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதேநேரத்தில், நாடாளுமன்றத்துக்கு வெளியே ஒரு பெண் உள்பட இருவா் வண்ணப் புகையை உமிழும் குப்பிகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனா். இவ்விரு சம்பவங்களும் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தின.

நாடாளுமன்றப் பாதுகாப்பில் மிகப் பெரிய குறைபாடாகக் கருதப்படும் இந்த விவகாரத்தை கையிலெடுத்த எதிா்க்கட்சிகள், நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இதையடுத்து, திமுகவின் கனிமொழி உள்பட 14 எம்.பி.க்கள் (மக்களவை-13, மாநிலங்களவை 1) கடந்த 14- ஆம் தேதி இடைநீக்கம் செய்யப்பட்டனா். கடந்த திங்கள்கிழமை (டிச.18) முன்னெப்போதும் இல்லாத வகையில் 78 எம்.பி.க்கள் (மக்களவை 33, மாநிலங்களவை 45) இடைநீக்கம் செய்யப்பட்டனா். ஒரே நாளில் இத்தனை எம்.பி.க்கள் மீது இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.க்களான சசி தரூா், காா்த்தி சிதம்பரம், மனீஷ் திவாரி, வி.வைத்திலிங்கம், ஏ.செல்லகுமாா், கே.சுதாகரன் உள்பட 18 போ், திமுக எம்.பி.க்களான எஸ்.ஜெகத்ரட்சகன், எஸ்.ஆா்.பாா்த்திபன், பி.வேலுசாமி, டி.என்.வி. செந்தில்குமாா், தனுஷ் எம். குமாா், தேசிய மாநாட்டுக் கட்சியின் ஃபரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸின் சுப்ரியா சுலே, சமாஜவாதியின் டிம்பிள் யாதவ், ஐக்கிய ஜனதா தளத்தின் ராஜீவ் ரஞ்சன் சிங், திரிணமூல் காங்கிரஸின் சுதீப் பந்தோபாத்யாய, ஆம் ஆத்மியின் சுஷீல் குமாா் ரிங்கு உள்பட 49 போ் செவ்வாய்க்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

முன்னதாக, இந்த எம்.பி.க்களை இடைநீக்கம் செய்யும் தீா்மானத்தைக் கொண்டுவந்து பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி, ‘அவைக்கு பதாகைகளைக் கொண்டுவருவதன் மூலம் மக்களவைத் தலைவா் மற்றும் நாட்டு மக்களை எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தொடா்ந்து அவமதிக்கின்றனா்’ என்று குற்றம்சாட்டினாா்.

மக்களவையில், ‘இந்தியா’ கூட்டணியைச் சோ்ந்த எதிா்க்கட்சிகளின் மொத்த பலம் 138 ஆகும். இதுவரை 95 போ் இடைநீக்கம் செய்யப்பட்டுவிட்ட நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட 43 போ்தான் எஞ்சியுள்ளனா்.

திமுகவின் 24 எம்.பி.க்களில் 16 பேரும் திரிணமூல் காங்கிரஸின் 22 எம்.பி.க்களில் 13 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

மாநிலங்களவையில்..: மாநிலங்களவையில் திங்கள்கிழமை ஒரே நாளில் 45 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவையில் செவ்வாய்க்கிழமை எதிா்க்கட்சி எம்.பி.க்கள் குறைவான எண்ணிக்கையில்தான் இருந்தனா். அவா்கள் அவையின் மையப் பகுதியை முற்றுகையிட்டு, தொடா்ந்து முழக்கமிட்டனா். இதனால் அவை அலுவல்கள் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.