நல்லிணக்கம் தொடர்பில் வடக்கு, கிழக்கு தமிழ் எம்.பிக்களுடன் ரணில் பேச்சு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (21) மாலை நடைபெற்றது.

இதன்போது நல்லிணக்கம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டன.

காணி, மீள்குடியமர்த்தல், நல்லிணக்கத்துக்கு அமைவாகச் சட்டத்தை நடைமுறைப்படுத்தல், தமிழக அகதி முகாம்களில் இருக்கும் இலங்கையரின் பிரச்சினைகள், வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் சாத்தியமான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பு கடந்த 13 ஆம் திகதி நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் அந்தச் சந்திப்பு பிற்போடப்பட்டது.

நேற்று நடைபெற்ற சந்திப்பில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ, உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி., கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், தவராசா கலையரசன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆஷு மாரசிங்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆர்.இம்.சீ.எம்.ஹேரத், சுற்றாலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் எச்.எம்.பீ.பீ.ஹேரத் உள்ளிட்டவர்களும், நல்லிணக்கம் தொடர்பிலான நிறுவனங்களின் பிரதானிகளும் கலந்துகொண்டனர்.


………

Leave A Reply

Your email address will not be published.