பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதான இளைஞர் ஒருவர் இன்று பிணையில் விடுவிப்பு.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தலைவரின் படம் மற்றும் சின்னம் பொறித்த ரீசேட் அணிந்து மாவீரர் தினத்தில் பங்கெடுத்த குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர், இன்று சாவகச்சேரி நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி கொடிகாமத்தில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னம் மற்றும் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் தாங்கிய ரீசேட் அணிந்து கொண்டு பங்கேற்ற நிலையில் அன்றைய தினமே இராணுவத்தினரால் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மேற்படி இளைஞருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்த கொடிகாமம் பொலிஸார், அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அந்த இளைஞர் சார்பாக முன்னிலையாகிய சட்டத்தரணி தர்மகுலசிங்கம் அஞ்சனன், இளைஞரை விடுவிப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதியைப் பெறுவதற்கான விண்ணப்பத்தை மன்றில் செய்திருந்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இனைஞரைப் பிணையில் விடுவிப்பதற்குச் சட்டமா அதிபர் ஆட்சேபனை தெரிவிக்காததையடுத்து இன்று நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மேற்படி இளைஞரைப பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞரின் சார்பில் சட்டத்தரணி தர்மகுலசிங்கம் அஞ்சனன் மன்றில் இன்று முன்னிலையாகி வாதாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.