வாகனங்களை பறிமுதல் செய்யும் லீசிங்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை – சி.டி.விக்ரமரத்ன

நிதி நிறுவனங்கள் அல்லது குத்தகை நிறுவனங்கள் வாகனங்களை பறிமுதல் செய்தால் அதனை கொள்ளைச் சம்பவமாக கருதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்ததனால் மக்களின் வருமானம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இதனால் மக்களுக்கு சலுகைகளை வழங்கும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

தனியார் கடன் தவணைகளை அறவிடுவதற்கு ஆறுமாதகாலம் அவகாசம் வழங்குமாறு குறிப்பிட்டு அரசாங்கம் கடந்த மார்ச் மாதமே வர்த்தமானி வெளியிட்டிருந்தது. இதன்போது வாகன குத்தகை நிறுவனங்களும் இவ்வாறு 6 மாதகால அவகாசத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் சில நிறுவனங்கள் அதனை கடைப்பிடிப்பதில்லை என்றும் , தவணைக் கட்டணங்களை செலுத்த தவறும் வாகனங்களை பறிமுதல் செய்வதாகவும் தெரியவந்துள்ளது.

அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள இந்த சலுகை காலத்திற்குள் நிதி நிறுவனமோ , குத்தகை நிறுவனமோ தவணைக்கட்டணங்கள் செலுத்தப்படவில்லை என்று பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு அளித்தால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று பதில் பொலிஸ்மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த சலுகைகாலத்தில் தவணை கட்டணத்தை செலுத்தவில்லை என்ற காரணத்தினால் குத்தகை நிறுவனங்கள் வாகனங்களை பறிமுதல் செய்தால் அதனை தண்டனைச் சட்டக்கோவைக்கமைய கொள்ளை அல்லது திருட்டு தொடர்பான வழக்காக பதிவுச் செய்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு வாகனங்களை பறிமுதல் செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கவரும் குத்தகை நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களினால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பிலும் மேற்கூறப்பட்டதைப் போன்று நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த வழக்கு குற்றவியல் சட்டத்திற்கமைய விசாரணையை நடத்தப் பட வேண்டும் என பதில் பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Comments are closed.