தமிழரசுக் கட்சியின் மாநாட்டை ஒத்திவைக்கும் திட்டம் இல்லை! – சாணக்கியன் தெரிவிப்பு.

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும். தற்போது வரை அதில் எந்த மாற்றமும் இல்லை. எங்களுடைய மனங்களில் மாநாட்டை ஒத்திவைக்கின்ற எண்ணம் இல்லை.”

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் (29) வெள்ளிக்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு நான் அறிந்தவரையில் திட்டமிட்டபடி ஐனவரி மாதம் 28 ஆம் திகதி நடைபெறும்.

எனினும், அதில் மாற்றங்கள் அல்லது ஏதும் வித்தியாசமான விடயங்கள் நடைபெற இருக்கின்றனவா? இல்லையா? என்பது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது.

ஆனால், ஒரு கட்சியினுடைய மாநாடு அறிவிக்கப்பட்டு பொதுச் சபை உறுப்பினர் எல்லாம் அழைக்கப்பட்டு மாநாட்டுக்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்த பின்னர் மாநாட்டை ஒத்திவைக்க வேண்டிய காரணம் நான் அறிந்த வரையில் இல்லை.

ஏனென்றால் பொறுப்புள்ள கட்சியென்றால் ஒரு மாநாட்டை நடத்தத் தீர்மானித்து அதற்கு ஒரு திகதியை அறிவித்தால் அந்தத் திகதியில் மாநாடு நடக்க வேண்டும். ஆகையினால் அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் மாநாடு நடக்க வேண்டும்.

எனினும், மாநாடு நடக்குமா என இந்தக் கேள்வி ஏன் இன்று எழுப்பப்படுகின்றது என எனக்குத் தெரியவில்லை. ஆனால், நான் அறிந்த வரையில் திட்டமிட்டபடி மாநாடு நடைபெறுவதில் தற்போது வரை எந்த மாற்றமும் இல்லை.” – என்றார்.

இதேவேளை, ‘இந்த மாநாட்டை ஒத்திவைக்கும் எண்ணம் ஏதும் கட்சிக்குள் இருக்கின்றதா?’ எனக் கேட்டபோது, “அவ்வாறு ஒத்திவைக்கும் எண்ணம் எவருக்கும் இல்லை” – என்று அவர் பதிலளித்தார்.

“எங்களுடைய மனங்களில் மாநாட்டை ஒத்திவைக்கின்ற எண்ணம் இல்லை. கட்சியில் ஏனைய எவரிடமேனும் அப்படி ஒத்திவைக்கின்ற எண்ணம் ஏதும் இருக்கின்றதா என நீங்கள்தான் அறிய வேண்டும்.” – என்றும் சாணக்கியன் எம்.பி. மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.