கோர விபத்தில் கணவன் சாவு; மனைவி படுகாயம்! – முன்னாள் இராணுவச் சிப்பாய் கைது.

வாகன விபத்தில் கணவன் உயிரிழந்துள்ளதுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார்.

இந்தக் கோரச் சம்பவம் அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் நேற்று (30) இரவு 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பாரவூர்தி ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது காரைச் செலுத்திச் சென்ற கெப்பிட்டிக்கொல்லாவை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார். காரின் முன் ஆசனத்தில் அமர்ந்து சென்ற அவரின் மனைவி (வயது 29) படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த இளம் தம்பதிக்கு 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது என்றும், மேற்படி குழந்தை இவர்களுடன் காரில் பயணிக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

விபத்துடன் சம்பந்தப்பட்ட பாரவூர்தியின் சாரதியைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர் 64 வயதுடைய முன்னாள் இராணுவச் சிப்பாய் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.