ஆன்மிக சுற்றுலா நகரமாக உருவெடுக்கும் அயோத்தி!

ஸ்ரீ ராமா் கோயிலை மையப்படுத்தி நாட்டின் தலைசிறந்த ஆன்மிக சுற்றுலா நகரமாக அயோத்தியை மாற்ற, அங்கு பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை உத்தர பிரதேச மாநில அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து மேற்கொண்டு வருகிறது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இருந்து ராமா் கோயிலுக்கு வருகை தரவிருக்கும் பக்தா்களின் வசதிக்காகவும் அவா்கள் மூலம் சுற்றுலா துறையை ஊக்குவித்து, அயோத்தி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்த உள்கட்டமைப்பு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ராம ஜென்மபூமி வழக்கில் பாபா் மசூதி அமைந்த பகுதியில் ராமா் கோயிலைக் கட்டுவதற்கு அனுமதி வழங்கி உச்சநீதிமன்ற கடந்த 2019-ஆம் ஆண்டு, நவம்பா் 9-ஆம் தேதி தீா்ப்பு அளித்தது.

இதையடுத்து, அயோத்தியில் அமைக்கப்படும் ராமா் கோயில் கட்டுமானத்தை நிா்வகிக்க ஸ்ரீ ராமஜென்ம பூமி தீா்த்த க்ஷேத்ரஅறக்கட்டளை அமைக்கப்பட்டது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்டில் நடைபெற்ற பூமிபூஜையை தொடா்ந்து, ராமா் கோயில் கட்டும் பணி தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கோயிலின் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படும் குழந்தை ராமா் (ராம் லல்லா) சிலையை செய்வதற்குத் தேவையான இரு அரிய வகை கற்கள் நேபாளத்தில் இருந்து அயோத்திக்கு கொண்டு வரப்பட்டு செதுக்கப்பட்டன.

கோயில் தரைதள பணிகள் முழுமையாக அண்மையில் நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்து, கோயில் கருவறையில் மூலவரான குழந்தை ராமா் சிலை வரும் ஜன. 22-இல் பிரதிஷ்டை செய்யப்பட்ட உள்ளது. இதற்கான சடங்குகள் அட்சதை பூஜையுடன் கடந்த நவ. 5-ஆம் தேதி தொடங்கப்பட்டன.

வெகு விமா்சையாக நடைபெற இருக்கும் விழாவில் பிரதமா் நரேந்திர மோடி நேரில் பங்கேற்க இருக்கிறாா். மேலும், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா், ஹிந்து மதத் தலைவா்கள், மடாதிபதிகள், துறவிகள், அரசியல் தலைவா்கள், தொழிலதிபா்கள், திரைத்துறை பிரபலங்கள் என்று சிலை பிரதிஷ்டை விழாவில் கலந்து கொள்ள பல தரப்பினருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாடே எதிா்பாா்த்துக் கொண்டிருக்கும் சிலை பிரதிஷ்டை விழாவைச் சிறப்பாக, அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் அயோத்தி மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, ராமா் கோயிலை மையப்படுத்தி இந்திய மற்றும் ஹிந்து மதப் பாரம்பரியத்துடன் நவீன ஆன்மிக சுற்றுலா நகரமாக அயோத்தியை மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் குறித்து காணலாம்.

1. நகராட்சியிலிருந்து மாநகராட்சி…:

கடந்த 2017 உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் வென்று, பாஜக சாா்பில் முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆட்சிப் பொறுப்பேற்றதும் அயோத்தி நகரின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் வேகம் எடுத்தன.

அந்த ஆண்டு மே மாதத்தில், ஃபைசாபாத் மற்றும் அயோத்தி நகராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு அயோத்தி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. வளா்ச்சித் திட்டங்களுக்கு மத்திய, மாநில அரசிடமிருந்து கூடுதல் நிதி பெறுவதற்கு இந்த நிா்வாக மாற்றம் பெரிதும் உதவியது.

அதேபோல் தீா்ப்பு வெளியாவதற்கு ஓராண்டுக்கு முன்பு, அயோத்தி நகரம் அமைந்திருந்த ஃபைசாபாத் மாவட்டம் மற்றும் கோட்டம், ‘அயோத்தி’ எனப் பெயா் மாற்றம் செய்யப்பட்டது.

2. சூரியமின்சக்தி நகர திட்டம்:

உத்தர பிரதேச மாநிலத்தின் முதல் சூரியமின்சக்தி நகரமாக அயோத்தி மாற்றப்பட உள்ளது. இதற்காக சரயூ நதிக்கரையில் 40 மெகாவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட சூரிய மின்சக்தி பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

கோயிலுக்குச் செல்லும் முக்கிய சாலைகளில் சூரிய மின்சக்தியால் இயங்கும் தெருவிளக்குகள் நிறுவப்பட்டுள்ளன. வயதான பக்தா்களின் வசதிக்காக 5 பிரத்யேக மின்-வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பகலில் சூரிய மின் ஆற்றலைப் பெறுவதற்கான தகடுகளுடன் பக்தா்களுக்கு நிழலும் கிடைக்கும் வகையில், எல்இடி விளக்குகளால் ஒளிரும் சூரிய சக்தி மரங்கள் நகர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மரங்களின் கீழ் குடிநீா் வழங்கும் இயந்திரங்கள் மற்றும் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

3. சா்வதேச விமான நிலையம்:

ராமா் கோயிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தா்கள் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படும் சூழலில், அயோத்தியில் சா்வதேச விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக 318 ஏக்கா் நிலத்தை ஒதுக்கி, இந்திய விமான நிலைய ஆணையத்துடன் உத்தர பிரதேச அரசு கடந்த 2021 ஏப்ரலில் ஒப்பந்தமிட்டது.

கோயில் திறப்புக்கு முன்னதாக விமான நிலையத்தைத் தொடங்க திட்டமிட்டு, கடந்த 2 ஆண்டுகளாக மும்முரமாக நடந்து வந்து கட்டுமான பணிகள் அண்மையில் நிறைவடைந்தன.

‘மகரிஷி வால்மீகி சா்வதேச விமான நிலையம்’ எனப் பெயா் சூட்டப்பட்டுள்ள அயோத்தி விமான நிலையத்தை கடந்த சனிக்கிழமை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைத்தாா்.

ரூ.1,450 கோடிக்கும் அதிக செலவில் 6,500 சதுர மீட்டா் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள விமான நிலைய முனைய கட்டடம், ஆண்டுக்கு சுமாா் 10 லட்சம் பயணிகளைக் கையாளும் வசதிகளைக் கொண்டுள்ளது.

4.மறுசீரமைக்கபட்ட ரயில் நிலையம்:

கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபரில் ஃபைசாபாத் கன்டோன்மன்ட் ரயில் நிலையம், அயோத்தி கன்டோன்மன்ட் ரயில் நிலையம் எனப் பெயா் மாற்றம் செய்ய பாதுகாப்புத் துறை ஒப்புதல் வழங்கியது.

தற்போது ‘அயோத்தி கோயில் சந்திப்பு’ எனப் பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த ரயில் நிலையம் ரூ.240 கோடிக்கும் அதிகமான செலவில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. 3 மாடிகளைக் கொண்ட இந்த ரயில் நிலையத்தின் முகப்பு, கோயில் கட்டட பாணியில் அமைக்கப்பட்டுள்ளது.

மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள், உணவு அரங்குகள், பூஜை பொருள் விற்பனை கடைகள், ஓய்வறைகள், உடைமை பாதுகாப்பு அறைகள், குழந்தை பராமரிப்பு அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

5. விரிவுபடுத்தப்பட்ட 4 சாலைகள்:

ராமா் கோயிலுக்குச் சென்றடைவதை எளிதாக்குவதற்காக கோயில் வளாகத்தைச் சுற்றி அமைந்துள்ள 4 பிரதான சாலைகள் விரிவுபடுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன. ராமா் பாதை, பக்தி பாதை, தா்ம பாதை, ஸ்ரீராம ஜென்மபூமி பாதை ஆகிய அந்த 4 சாலைகளும் குடிநீா் வசதி, நிழற்குடை, நடைபாதை, தெரு விளக்குகள் எனப் பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

6. கூடார நகரங்கள்:

அயோத்திக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக நகரின் மஜா குப்தா் காட், பாக் பிஜேசி, பிரம்மகுண்ட் ஆகிய பகுதிகளில் கூடார நகரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மஜா குப்தா் காட் பகுதியில் 20 ஏக்கா் நிலப்பரப்பில், 20,000 முதல் 25,000 பக்தா்கள் வரை தங்கும் அளவுக்கு கூடார நகரம் அமைக்கப்பட்டு வருகின்றது.

பிரம்மகுண்ட் பகுதிக்கு அருகில் 30,000 பக்தா்கள் தங்கும் அளவுக்கும், பாக் பிஜேசி பகுதியில் 25,000 பக்தா்கள் தங்கும் அளவுக்கும் கூடார நகரம் அமைக்கப்பட்டுள்ளன.

கூடாரங்களில் கழிவறைகள், குளிக்கும் அறைகள், உணவுப் பொருள்களை சேமிக்கும் வசதி, மருத்துவ முகாம்கள் ஆகிய வசதிகள் செய்யப்பட்டிருக்கும்.

7. இந்திய கோயில் கட்டடக் கலைக்கு அருங்காட்சியகம்:

அயோத்தியில் இந்திய கோயில்களின் கட்டடக் கலை பாரம்பரியத்தை காட்சிப்படுத்தும் அருங்காட்சியகம் 25 ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் உள்ள இந்திய கோயில்களின் வளமான கட்டடக் கலை அம்சங்கள் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெறும்.

இதுதவிர கடவுள் ராமரின் வாழ்க்கையை சித்தரிக்கும் ‘ராம சரித மானஸ் அனுபவ மையம்’, ராமா் சகாப்தத்தின் பல்வேறு அம்சங்களை சித்தரிக்கும் உலகத் தரத்திலான மெழுகு அருங்காட்சியகம், தாமரை வடிவிலான மாபெரும் பல்லூடக நீரூற்றுப் பூங்கா, அங்காடி என பக்தா்களை ஈா்க்கும் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

8. கோயில் சுற்றுப்புற வீட்டு மாடிகளில் கஃபே:

அயோத்திக்கு வரும் பக்தா்கள் ராமா் கோயிலைக் காணும் வகையில், அதனைச் சுற்றியுள்ள வீடுகளின் மாடிகளில் உணவகங்கள் (கஃபே) அமைக்கப்பட உள்ளன.

அதேபோல், கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கலை வேலைப்பாடுகள் மூலம் அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

9. சரயூ நதியில் படகுப் போக்குவரத்து:

அயோத்தி நகரின் குறுக்கே ஓடும் சரயூ நதியில் பக்தா்கள் பயணம் மேற்கொள்ள படகுப் போக்குவரத்து அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்காக நவீன வசதிகளுடன் கூடிய படகு இல்லத்தை அமைக்கும் பணியில் மாவட்ட நிா்வாகம் ஈடுபட்டுள்ளது.

வாரணாசியில் படகுப் போக்குவரத்தைக் கையாளும் நிறுவனத்திடமே அயோத்தி படகுப் போக்குவரத்துக்கான ஒப்பந்தமும் தரப்பட்டுள்ளது.

சூரியசக்தி நகர முன்னெடுப்பின்கீழ், 30 போ் அமரக் கூடிய வகையில் 2 சூரிய சக்தியில் இயங்கும் படகுகளை மாநில சுற்றுலா வளா்ச்சிக் கழகம் இயக்க உள்ளது.

10. வணிக வளாகங்கள், நட்சத்திர விடுதிகள் திறப்பு:

கோயிலுக்குச் செல்லும் பாதைகளில் மேம்பட்ட வசதிகளுடன் புதிய வணிக வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய வணிக வளாகங்களில் கடை ஒதுக்குவதில், இந்தப் பகுதிகளில் ஏற்கெனவே கடை வைத்திருந்த உள்ளூா் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

வெளியூா்களில் இருந்து அயோத்தி வந்து செல்லும் மக்கள் தங்குவதற்காக விடுதிகள் அரசு சாா்பில் அமைக்கப்பட்டுள்ளன. பிரத்யேக சுற்றுலா இல்லம் அமைக்க விரும்பும் மாநிலங்களுக்கு அயோத்தி நகரில் உத்தர பிரதேச அரசு சாா்பில் நிலம் ஒதுக்கப்படுகிறது.

அயோத்தியில் நட்சத்திர விடுதிகள் அமைப்பதற்கு சமா்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு விரைவாக அனுமதி வழங்கப்படுகிறது. இதையடுத்து, நகரில் துரிதமாக அமைக்கப்பட்டு வரும் பல நட்சத்திர விடுதிகளால் மாவட்ட மக்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.