ஜப்பானில் தீப்பிடித்த விமானம் : பயணிகள் உயிர் தப்பிய அதிசயம் : கடலோரக் காவல்படை விமானத்தில் இருந்த ஐவர் மரணம் (Video)

தோக்கியோ: ஜப்பான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று, தோக்கியோவின் ஹனெடா விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 2) தீப்பிடித்து எரிந்தது.

கடலோரக் காவற்படை விமானத்துடன் மோதியதால் அது தீப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது. சுமார் இரண்டு மணிநேரத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.

516 என்ற சேவை எண்ணைக் கொண்ட ஜப்பான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் இருந்த பயணிகள், பணியாளர்கள் என 379 பேரும் வெளியேற்றப்பட்டதாக ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தெரிவித்தது. ஆனால், கடலோரக் காவல்படை விமானத்தில் இருந்த அறுவரில் ஐவர் மாண்டதாக என்எச்கே செய்தி நிறுவனம் தெரிவித்தது. ஒருவர் தப்பியதாகவும் என்எச்கே முன்னதாகக் கூறியது.

ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கி‌ஷிடா, மாண்டோருக்குத் தமது அனுதாபத்தைத் தெரிவித்துக்கொண்டார்.

விபத்துக்குள்ளான கடலோரக் காவல்படை விமானம், புத்தாண்டு நாளன்று ஜப்பானை உலுக்கிய மோசமான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி வழங்க நிகாட்டா விமான நிலையத்துக்குப் பயணம் மேற்கொள்ள இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. நிகாட்டா விமான நிலையம், ஜப்பானின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது.

தீப்பிடித்த விமானம் ஓடுபாதையில் சறுக்கிச் சென்றதையும் தீயை அணைக்க தீயணைப்பாளர்கள் கடுமையாகப் போராடியதையும் என்எச்கே நேரலையாக ஒளிபரப்பிய காணொளி காட்டியது.

புகைமூட்டமாக இருந்த விமானத்தின் உட்புறத்தில் பயணிகள் அலறியபடி இருந்ததைக் காட்டும் காணொளிகளும் படங்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.

பயணிகள் விமானத்துடன் தனது விமானம் ஒன்று மோதியதற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகக் கடலோரக் காவற்படை தெரிவித்திருந்தது.

ஹொக்கைடோவின் ஷின்-சிட்டோஸ் விமான நிலையத்திலிருந்து ஜப்பான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டு வந்ததாக அந்நிறுவனத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார். ஹனெடா விமான நிலையத்தில் தரையிறங்கியபோது சிறிது நேரத்தில் அது கடலோரக் காவற்படை விமானத்துடன் மோதியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, ஹனெடா விமான நிலையத்தின் அனைத்து ஓடுபாதைகளும் மூடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.