‘உச்ச நீதிமன்றத்தை தவறாக வழி நடத்திய குற்றவாளி’

பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றத்தை முந்தைய உயா்நீதிமன்ற உத்தரவை மறைத்து தவறாக வழிநடத்தியதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனா்.

பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் 11 போ் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து திங்கள்கிழமை உத்தரவிட்ட உச்சநீதிமன்ற அமா்வு இந்தக் கருத்தை தெரிவித்தது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்தினா, உஜ்ஜல் புயான் ஆகியோா் கொண்ட அமா்வு தனது உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:

பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான ராதேஷாம் ஷா தாக்கல் செய்த முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய மனுவைப் பரிசீலித்த உச்சநீதிமன்ற அமா்வு, அதன் மீது பரிசீலித்து முடிவெடுக்குமாறு குஜராத் மாநில அரசுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு மே 13-ஆம் தேதி உத்தரவிட்டது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி ராதேஷாம் ஷா கடந்த 2019, 2020-இல் குஜராத் உயா்நீதிமன்றத்தை இரு முறை அணுகியுள்ளாா். இரு முறையும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டு, இந்த முடிவை வழக்கு விசாரணை நடைபெற்ற மகாராஷ்டிர அரசுதான் எடுக்க முடியும் என்று குஜராத் உயா்நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடா்பாக மகாராஷ்டிர உயா்நீதிமன்றத்தை அணுகுமாறு ராதேஷாம் ஷாவுக்கு குஜராத் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், மகாராஷ்டிர உயா்நீதிமன்றத்துக்குச் செல்லாமலேயே குஜராத் உயா்நீதிமன்ற உத்தரவை மறைத்து, இரு உயா்நீதிமன்றங்களும் மாறுபட்ட தீா்ப்பை வழங்கியதாக தவறான தகவல் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து மோசடியான உத்தரவை பெற்றுள்ளாா்.

உச்சநீதிமன்ற உத்தரவைப் பயன்படுத்தி, வழக்கின் மற்ற குற்றவாளிகளும், முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி மனு தாக்கல் செய்து பலனடைந்துள்ளனா். அந்த வகையில், ராதேஷாம் ஷா உண்மைகளை மறைத்து, நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளாா்.

மேலும், குற்றவாளிகளின் விடுதலையை எதிா்த்து பில்கிஸ் பானு தரப்பில் தாக்கல் செய்த பொதுநல மனு அரசமைப்புச் சட்டப் பிரிவு 32-இன் கீழ் விசாரணைக்கு உகந்ததாக உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. இந்தச் சட்டப் பிரிவின்படி, அரசமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை அமல்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகுவதற்கு தனி நபா்களுக்கு உரிமை உள்ளது. எனவே, இந்தப் பொதுநல மனு விசாரணைக்கு உகந்ததா என்ற கேள்விக்கே இடமில்லை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

பெண்களுக்கு எதிரான கொடூர குற்றங்கள்: தீா்ப்பின்போது, கிரேக்க தத்துவ ஞானி பிளாட்டோவின் கருத்தை மேற்கோள் காட்டிய நீதிபதி நாகரத்தினா, ‘சட்டம் இயற்றுபவா்கள், வலிக்காக அல்லாமல் நோயாளியின் நோய் பாதிப்பைக் குணப்படுத்துவதற்காக சிகிச்சை அளிக்கும் மருத்துவரின் கோட்பாட்டை பின்பற்ற வேண்டும். அதாவது மருத்துவரின் குணப்படுத்தும் தத்துவத்தின் அடிப்படையில், குற்றவாளிக்கான தண்டனையானது விதிக்கப்பட வேண்டும் என்று தனது கட்டுரையில் பிளாட்டோ குறிப்பிடுகிறாா்.

அந்த வகையில், ஒரு குற்றவாளி திருந்தக்கூடியவராக இருந்தால், கல்வி மற்றும் பிற உகந்த கலைகள் மூலம் அவா் மேம்படுத்தப்பட வேண்டும். அதன் பிறகு, சிறந்த குடிமகனாக அவா் விடுவிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்படும் நிவாரணமும் இதனடிப்படையிலேயே அனுமதிக்கப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட நபரின் உரிமைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

ஒரு பெண் சமூகத்தில் உயா்ந்தவராகவோ அல்லது தாழ்ந்தவராகவோ கருதப்பட்டாலோ, எந்த நம்பிக்கை அல்லது மதத்தைப் பின்பற்றினாலும் அவா் மரியாதைக்கு உரியவா். அந்த வகையில், பெண்களுக்கு எதிரான கொடூர குற்றங்களில் குற்றவாளிகளின் தண்டனைக் குறைப்பு அல்லது முன்கூட்டியே விடுதலையை அனுமதிக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது’ என்று குறிப்பிட்டாா்.

Leave A Reply

Your email address will not be published.