பட்டியலின இளைஞருடன் திருமணம்; மகளை கொலை செய்து எரித்த தந்தை

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே, நெய்வவிடுதியை சேர்ந்த பெருமாள் மகள் ஐஸ்வர்யா, 19, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்தவர். அருகில் உள்ள கிராமமான பூவாளூரை சேர்ந்த, பாஸ்கர் மகன் நவீன், 19, டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார்; பட்டியல் இனத்தை சேர்ந்தவர்.

திருப்பூர் மாவட்டம், அரவப்பாளையத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் இருவரும் பணியாற்றினர். இந்நிலையில், டிச., 31ம் தேதி, நண்பர்கள் முன்னிலையில், அவர்கள் திருமணம் செய்து, வீரபாண்டி அருகே, வாடகை வீட்டில் தங்கினர். அவர்கள் திருமணம் செய்து கொண்ட வீடியோ ‘வாட்ஸாப்’பில் பரவியது. இதை அறிந்த ஐஸ்வர்யாவின் தந்தை, பல்லடம் போலீசில் புகார் கொடுத்தார். விசாரித்த போலீசார், கடந்த 2ம் தேதி, ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், 3ம் தேதி, ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் கொலை செய்து, எரித்து விட்டதாக, நவீனுக்கு, நண்பர்கள் தெரிவித்தனர். இது குறித்து, வாட்டாடத்திக்கோட்டை போலீசில், நவீன் புகார் அளித்தார். நெய்வவிடுதி மற்றும் பூவாளூர் கிராமத்தில், போலீசார் குவிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள ஐஸ்வர்யாவின் தந்தையை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.