ஆறுமுகனைப் போட்டுத் தள்ளியது கஞ்சிபானி இம்ரான் குழுவினரா?

கொழும்பு, மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரந்திய உயன தொடர்மாடி குடியிருப்புக்கு அருகில் நபர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் பாதாளக் குழு மோதல் தொடர்புபட்டுள்ளது எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணியளவிலேயே துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஓட்டோவில் இருந்த இருவரே துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 40 வயதுடைய நபர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

‘படா ரஞ்சி’ என அழைக்கப்படும் செல்வம் ஆறுமுகன் என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

இந்தியாவில் தலைமறைவாகியுள்ள பாதாளக் குழு உறுப்பினர் பூகுடு கண்ணாவின் உதவியாளராக இவர் செயற்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது. தைப்பொங்கலைக் கொண்டாட வந்திருந்த நிலையிலேயே துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

நிழல் உலக தாதா கஞ்சிபானி இம்ரானின் தந்தை சில வருடங்களுக்கு முன்னர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அந்தச் சம்பவத்துக்குப் பழிதீர்க்கும் வகையில் கஞ்சிபானி இம்ரானின் சகாக்களால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

நிழல் உலக தாதா கஞ்சிபானி இம்ரான் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்தாலும், பின்னர் பிணையில் விடுதலையானதும், நாட்டைவிட்டு தப்பியோடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.