அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா… நாடு முழுவதும் களைகட்டும் கொண்டாட்டம்
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு விழா நாளை மறுதினம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, நண்பகல் 12.20 மணிக்கு ராமர் சிலையை நிறுவ உள்ளார். இந்த விழாவில், நாடு முழுவதிலுமிருந்து 7 ஆயிரம் பேர் கலந்துகொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், நேற்று நேரில் ஆய்வுசெய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அயோத்தியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பக்தர்கள் வந்துசெல்வதற்கு தனி வழித்தடம் ஏற்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.
கோயிலின் கர்ப்ப கிரகத்தில் நேற்று முன்தினம் வைக்கப்பட்ட ராமர் சிலையின் காட்சிகள் வெளியாகியுள்ளன. 51 அங்குல உயர ராமர் சிலையை மைசூருவைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் அருண் யோகிராஜ் வடிவமைத்துள்ளார். திறப்பு விழாவையொட்டி, அயோத்தி ராமர் கோயில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அயோத்தியின் சரயூ படித்துறையில் சந்தியா ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ராமர் சிலை நிறுவுதல் விழாவைத் தொடர்ந்து வழங்குவதற்கான பிரசாதம், அயோத்தியை வந்தடைந்தது. லக்னோவைச் சேர்ந்த பக்தர் ஒருவர் இதனைத் தயாரித்து வழங்கியுள்ளார். இதேபோல, பக்தர்களுக்கு வழங்குவதற்காக திருப்பதி மலையில் சுத்தமான நாட்டு பசு நெய்யில் ஒரு லட்சம் லட்டுக்கள் தயார்செய்யப்பட்டுள்ளன. 350 அட்டைப் பெட்டிகளில் வைக்கப்பட்ட இந்த லட்டுக்கள், ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. இவை சிறிய சரக்கு விமானம் மூலம் அயோத்திக்கு சென்றடைய உள்ளது.
வாரணாசியில் 500 கிலோ லட்டு தயாரிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதேபோல் உத்தராகண்டின் டேராடூன் நகரம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் பங்கேற்க அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அயோத்தி கோயில் திறப்பையொட்டி, மத்தியப்பிரதேசத்தில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் நாளை மறுதினம் அரை நாள் விடுமுறையை மாநில அரசு அறிவித்துள்ளது. அனைத்து தனியார் மற்றும் அரசு பல்கலைக் கழகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவிலும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, உத்தரப்பிரதேசம், கோவா, ஹரியானா, சத்தீஷ்கர், திரிபுரா, ஒடிசா, குஜராத், அசாம் மாநிலங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், நாடு முழுவதும் உள்ள அலுவலகங்களுக்கு நாளை மறுதினம் ஒரு நாள் விடுமுறை அறிவித்துள்ளது.