இந்தியா – இலங்கை இடையே விரைவில் பாலம்!

இந்தியா, இலங்கை இடையே பாலம் அமைக்கும் பணியை மத்திய அரசு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்ட அடல் சேது பாலம் திறக்கப்பட்டது. ரூ.17, 840 கோடி செலவில் 21.8 கிலோ மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ளது. இதில் சுமார் 16.5 கிலோ மீட்டர் தூரம் கடலில் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் இந்தியாவின் நீண்ட பாலம் மற்றும் மிக நீண்ட கடல் பாலம் என்ற பெருமைகளைப் பெற்றுள்ளது.

இந்தியா – இலங்கை இடையே பாலம்:
இதனைத் தொடர்ந்து சுற்றுலாவையும், பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மற்றொரு முக்கிய முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. அதன்படி இந்தியா, இலங்கை இடையே பாலம் அமைக்கும் பணியை மத்திய அரசு தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த திட்டமானது இந்தியாவின் தனுஷ்கோடி மற்றும் இலங்கையின் தலைமன்னாரை இணைக்கும் வகையில் கடலின் குறுக்கே 23 கிலோமீட்டர் நீளமுள்ள பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து, மத்திய அரசு ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ராமர் சேது பாலம், போக்குவரத்து செலவை 50 % குறைத்து இலங்கை தீவை இணைக்க உதவும். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இதற்கான ஆய்வுகள் விரைவில் தொடங்கப்படுகிறது.

கடந்தாண்டு ஜூலை மாதம் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியா வந்தபோது பாலம் அமைக்க ஒப்புதல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்ற அமைச்சகங்கள், அரசு நிறுவனங்களுடன் ஒரு ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாலம் அமைப்பது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

அயோத்தி கோயில் விழாவிற்கு முன்னதாக பிரதமர் மோடி தனது ஆன்மீக பயணத்தை அரிச்சல்முனை பகுதியில் முடித்தார். இதனைத் தொடர்ந்து இந்த கடல் பாலம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.