“எங்கள் மருமகன் தமிழக முதல்வராவாரா? – விஜய்யின் கட்சி தொடர்பில் மனோவின் ‘பேஸ்புக்’கில் இப்படிப் பதிவு.

“அமெரிக்க உப ஜனாதிபதி கமலா, சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் ஆகியோர் வென்ற போது, சொல்லிக்கொண்டது போல், விஜய் கட்சி வெற்றி பெற்று அவர் அங்கே முதலமைச்சரானால், “எங்கள் மருமகன் தமிழக முதலமைச்சர்” என்று இலங்கையில் நாம் சொல்லிக்கொள்ளலாம்.”

இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘தமிழக வெற்றி கழகம்’ எனும் கட்சி தொடர்பில் மனோ கணேசன் எம்.பி. தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“தமிழ்நாட்டில் இன்று அதிரடி பேச்சு பொருள், நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகம்’.

தமிழ்நாடு இலங்கைக்குச் சமீபமான தமிழர் பெரும்பான்மையாக வாழும் அரசியல் அலகு. ஆகவே, அங்கே நடப்பதை பற்றி கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது.

விஜயகாந்த் வரை புதுக்கட்சி ஆரம்பித்த அனைவரும் ‘திராவிடம்’ என்ற சொல்லை, கட்சி பெயரில் சேர்த்துக்கொண்டார்கள். சீமான்தான் முதலில் ‘திராவிடம்’ என்பதை சித்தாந்த ரீதியாக கைவிட்டு, அதற்குப் பிரபல மாற்றாக தமிழ்த் தேசியம் என்பதைக் கையில் எடுத்தார்.

விஜய்யின் அரசியல் கட்சியும் ‘திராவிடம்’ என்பதைக் கைவிட்டு விட்டது. ஆனால், ‘கழகம்’ என்பதை விடவில்லை. சித்தாந்த ரீதியாகவா இதுவென சொல்ல இது காலமில்லை. கட்சி பெயரை ஆங்கிலத்தில் எழுதினால், TVK. அதை, தளபதி விஜய் கழகம் என்றும் யோசித்தார்கள் போலும்.

சமகாலத்தில் கமல் சினிமாவில் வீழ்ச்சியை உணர்ந்து கட்சி ஆரம்பித்தார். அதன்பிறகு அவரது ஒரு படம் சிறப்பாக ஓடி சினிமாவில் அவருக்கு மறுவாழ்வு கொடுத்திருப்பது வேறு விடயம். இப்போது அவரது கட்சி ஏறக்குறைய கரைந்த கட்சி. இனி கலைந்த கட்சிதான். எம்.ஜி.ஆர். சந்தையில் உச்சத்தில் இருக்கும்போது, தனிக்கட்சி ஆரம்பித்தார். அதுபோல், சந்தையில் உயரத்தில் இருக்கும்போதுதான், விஜய்யும் கட்சி ஆரம்பித்துள்ளார்.

இந்தக் கட்சி, வெற்றி பெறுகின்றதோ, இல்லையோ, தமிழ் சினிமாவில் விஜய்யின் வெற்றிடம், அவரையடுத்த நடிகர்களுக்கு, இன்று பார்ட்டி போட்டு தூள் கிளப்பும் பேரானந்தத்தைத் தந்திருக்கும். வயதானாலும் ரஜனிக்கு இன்னும் இரண்டு வருடம் எக்ஸ்டென்சன் போடுங்கப்பா..!

அரசியல் ரீதியாக, சீமான் தாக்குப் பிடிப்பார். அ.தி.மு.க., அண்ணாமலை பி.ஜே.பி. ஆகியவற்றுக்கு உடன் ஆபத்து! தன் தந்தை சந்திரசேகரை, விஜய் திட்டமிட்டு ஒதுக்கி வைத்துள்ளார் என எண்ணுகின்றேன். அவரை இதில் உள்வாங்கினால் கட்சி, கோமாளிகள் கும்மாளம் ஆகிவிடும் என்ற பயம் விஜய்க்கு இருப்பதாக நான் நினைக்கிறேன்.

இந்திய பொருளாதார வளர்ச்சியில், தமிழ்நாடு முதலாவது, இரண்டாவது இடத்தில் இருக்கும் மாநிலம். தமிழ்நாட்டு மாநில அரசுகள் எப்படியோ, மாநிலம் வளர்ந்து விட்டது. அதன் காரணம் அங்கு நிலவும் சமநீதி சமுதாய கொள்கை, கல்வி வளர்ச்சி, கடும் முயற்சியாளர்கள், உழைப்பாளர்கள் சார்ந்த தனியார் துறை பொருளாதாரம். அதனால்தான் தமிழகம் இன்று இந்தியாவில் மிகவும் அதிக நகரமயமாக்களை கண்ட மாநிலம் ஆகியுள்ளது.

ஆகவே, சமநீதி கொள்கையை, ‘தமிழக வெற்றி கழகம்’ கைவிடகூடாது என்பது என் எதிர்பார்ப்பு. மற்றபடி, எல்லாம் ஊகங்கள்தான். பொறுத்துப் பார்க்கலாம்…!

கடைசியாக சிரித்து மகிழ ஒன்று. அமெரிக்க உப ஜனாதிபதி கமலா, சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் ஆகியோர் வென்ற போது, சொல்லிக்கொண்டது போல், விஜய் கட்சி வெற்றி பெற்று அவர் அங்கே முதலமைச்சரானால், “எங்கள் மருமகன் தமிழக முதலமைச்சர்” என்று இலங்கையில் நாம் சொல்லிக்கொள்ளலாம்..!” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.