இன்சாட்-3 டிஎஸ் செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி எஃப்-14

வானிலை மாறுபாடுகளை கண்காணித்து பேரிடர் காலங்களில் உதவுவதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சார்பில் இன்சாட் வகை செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இன்சாட்-3டி மற்றும் இன்சாட்-3டிஆர் செயற்கைக்கோள்கள் விண்ணில் செயல்பாட்டில் உள்ளன. இதன் தொடர்ச்சியாக வானிலை ஆய்வுக்கான அதிநவீன இன்சாட்-3டிஎஸ் எனும் செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

இது, ஜிஎஸ்எல்வி எஃப்-14 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 5.30 மணியளவில் விண்ணில் ஏவப்படுகிறது. மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், இந்திய கடல்சார் ஆய்வு மையம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இந்த செயற்கைகோள் தகவல்கள் மூலம் பயனடையும் என கூறப்பட்டுள்ளது. ராக்கெட் ஏவுதலுக்கான இருப்பத்து ஏழரை மணி நேர கவுன்ட்டவுன் நேற்று பிற்பகல் 2 மணியளவில் தொடங்கியது. ராக்கெட்டை ஏவுவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மொத்தம், 2,275 கிலோ எடை கொண்ட இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோளில் 6 இமேஜிங் சேனல்கள் உள்பட 25 விதமான ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை புவியின் பருவநிலை மாறுபாடுகளை துல்லியமாகக் கண்காணித்து வானிலை தகவல்களை நிகழ் நேரத்தில் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோள் 34,000 கி.மீ., உயரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளதாகவும். இதன்மூலம் சென்னையில் பெருமழை உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே அறிந்து தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் விஞ்ஞானி வெங்கடேஷ்வரன் தெரிவித்தார்.

மேலதிக செய்திகள்

யாழில் எம்.பிக்கள், புத்திஜீவிகளை நேரில் சந்தித்த இந்தியத் தூதுவர்!

தீவிர போராட்டம்; விவசாயி, போலீஸ்காரர் பலி – காரணமான கண்ணீர் புகைகுண்டு?

Leave A Reply

Your email address will not be published.