சாய்ந்தமருது மாணவர்கள் இருவர் நிந்தவூர் கடலில் மூழ்கி மாயம்!

அம்பாறை, மாளிகைக்காடு – சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் நிந்தவூர் பிரதேச கடலில் படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல்போயுள்ளனர்.

மாளிகைக்காடு – சாய்ந்தமருது எல்லை வீதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 13 – 15 வயதுக்குட்பட்ட 8 மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை முடித்துக்கொண்டு சைக்கிள்களில் நிந்தவூர் – ஒலுவில் எல்லை கடற்கரைக்குச் சென்று படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது மாலை 4.20 மணியளவில் அதில் இருவரைக் கடலலை உள்ளிழுத்துச் சென்றுவிட்டது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடலில் இழுத்துச் செல்லப்பட்டுக் காணாமல்போன மாணவர்கள் இருவரையும் சம்பவத்தைக் கேள்வியுற்ற நிமிடம் முதல் மீனவர்களும், பொதுமக்களும் இயந்திரப் படகுகளைக் கொண்டு தேடியும் இன்று இரவு 9 மணி வரை அந்த மாணவர்களின் உடல்களைக் கண்டுபிடிக்க முடியாமல் இருள் காரணமாக தேடுதல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஏனைய 6 மாணவர்களையும் அவர்கள் பயணித்த சைக்கிள்களுடன் நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளுக்காகப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.