சாதி, மதம், மொழி அடிப்படையில் வாக்கு சேகரிக்க கூடாது… அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

சாதி, மதம், மொழியின் அடிப்படையில் வாக்கு சேகரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. தேர்தல் தேதி வெளியானவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வர உள்ளன. இதனை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், அரசியல் கட்சிகள், நட்சத்திர பேச்சாளர்கள், தலைவர்கள் என அனைவரும் தேர்தல் நன்னடத்தை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களை தேர்தல் பரப்புரைக்கு பயன்படுத்தக் கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சாதி, மதம் மற்றும் மொழியின் அடிப்படையில் வாக்கு கேட்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தவறினால் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. மேலும், கடந்த தேர்தல்களில் நோட்டீஸ் பெற்ற நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீண்டும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், புதிய அறிவிப்புகள், அரசு திட்டம் தொடர்பான புதிய ஆணை பிறப்பிக்கக் கூடாது என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அனைத்து அரசுத் துறைகளின் செயலர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சம்பந்தப்பட்ட துறைகளின் செயலர்கள், அரசாணை தொடர்பான பதிவேட்டில், இறுதி அரசாணை வெளியிட்ட பின் ஒரு கோடிட்டு முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். அதை நகல் எடுத்து, தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி அதன் மூலம் தேவையற்ற சர்ச்சையை தவிர்க்கலாம் எனவும், குறிப்பாக, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 2 மணி நேரத்துக்குள் அரசாணை தொடர்பான பதிவேடுகளை அனுப்ப வேண்டும் எனவும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளுக்காக மூன்று கம்பெனி துணை ராணுவத்தினர் கேரளாவில் இருந்து ரயில் மூலம் கோவை வந்தனர். கேரள மாநிலம், கொச்சியில் இருந்து விரைவு ரயில் மூலம் கோவை ரயில் நிலையம் வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை தேர்தல் பிரிவு போலீஸார் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து கோவை நகரிலேயே ஒரு கம்பெனி துணை ராணுவப் படையினர் தங்கினர். திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக தலா ஒரு கம்பெனி துணை ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோன்று சென்னைக்கு துணை ராணுவப் படையை சேர்ந்த இரண்டு கம்பெனியும், ஆவடி, தாம்பரத்திற்கு தலா ஒரு கம்பெனியும் என மொத்தம் 7 கம்பெனி துணை ராணுவப் படையினர் வருகை தந்தனர்.

மேலதிக செய்திகள்

மரண விசாரணை, பிரேத பரிசோதனையால் சாந்தனின் பூதவுடல் யாழ். வருவது தாமதம் – இறுதிக்கிரியை தொடர்பில் இன்னும் முடிவில்லை.

3 யாழ். தீவுகளுக்கு மின்சாரம் வழங்க இந்தியாவிடமிருந்து , 10.995 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

பெங்களூரு குண்டு வெடிப்பு: கண்காணிப்பைத் தீவிரப்படுத்திய தில்லி போலீஸார்!

சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் பலி

Leave A Reply

Your email address will not be published.