தமிழ் மக்கள் பெருமளவில் திரண்டு சாந்தனின் புகழுடலுக்குக் கண்ணீர் மல்கி அஞ்சலி! ( Video & Photos)

சாந்தன் என்று அழைக்கப்படும் தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் புகழுடலுக்குத் தமிழ் மக்கள் இன்று பெருமளவில் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

தமிழகத்தில் உயிர் துறந்த சாந்தனின் புகழுடல் இன்று தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்த ஏதுவாக வவுனியாவில் இருந்து அவரது சொந்த ஊரான வடமராட்சிக்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.

வவுனியா முன்னாள் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் அலுவலகத்துக்கு முன்பாக இன்று காலை அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் சாந்தனின் புகழுடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அங்கிருந்து புகழுடல் ஊர்வலமாக வவுனியா பழைய பஸ் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கும் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

அங்கிருந்து புகழுடல் தாங்கிய ஊர்தி ஊர்வலமாக மாங்குளம் பகுதிக்கு வந்தது. அங்கும் புகழுடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து கிளிநொச்சியில் மக்கள் அஞ்சலிகாகப் புகழுடல் வைக்கப்பட்ட பின்னர் யாழ்ப்பாணத்துக்குப் புகழுடல் எடுத்துவரப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் கொடிகாமம், நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டிக்குப் புகழுடல் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு வல்வெட்டித்துறை – தீருவிலில் இன்று மாலை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.

அங்கு நடைபெறும் இறுதி அஞ்சலி நிகழ்வில் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு உணர்வுபூர்வமாக மலரஞ்சலி செலுத்தி வருவதுடன் கண்ணீர்மல்கி தமது கவலைகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதன்பின்னர் சாந்தனின் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்படும் புகழுடல் நாளை அவரது குடும்ப மயானமான எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.