ஆயிரம் மகளிருக்கு விவசாய ட்ரோன் வழங்கிய பிரதமர் மோடி

டெல்லியில் ‘நமோ ட்ரோன் திதி யோஜனா’ திட்டத்தின் கீழ் விவசாய ட்ரோன்களை மகளிர் பயன்படுத்துவதை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டு, பெண்களை உற்சாகப்படுத்தினார்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் பிரதமர் மோடி நாட்டின் பல மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல நலத்திட்ட உதவிகளையும் புதிய திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகிறார். அண்மையில் மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு, வீட்டு சமையல் கேஸ் சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மறுநாளே அதாவது மார்ச் 9ம் தேதி 100 ரூபாய் சிலிண்டர் விலை குறைப்பு அமலுக்கு வந்தது.

அடுத்த அதிரடியாக வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று ஊதிய உயர்வு மற்றும் வாரத்தில் இரண்டு நாள் விடுமுறை ஆகியவற்றுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அந்தவகையில் வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீத சம்பள உயர்வு வழங்கி மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது. மேலும் வாரத்தில் இரண்டு நாள் விடுமுறை குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியிட போவதாகவும் கூறியது.

இதையடுத்து டெல்லியில் இந்திய வேளான் ஆராய்ச்சி நிறுவனத்தில் பெண்கள் அதிகாரம், வளர்ச்சியடைந்த பாரதம் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரதமர் மோடி, ஆயிரம் மகளிருக்கு விவசாய ட்ரோன்களை வழங்கினார். மேலும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் மற்றும் மூலதன ஆதரவு நிதி 10 ஆயிரம் கோடி ரூபாயை வழங்கினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், நாட்டில் பெண்கள் அதிகாரமளிக்க சுய உதவிக்குழுக்கள் புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார். கிராமப்புற பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது குறித்து தான் பேசும்போதெல்லாம், காங்கிரஸ் போன்ற கட்சிகள் தன்னை கேலி செய்து, அவமானப்படுத்தியதாக கூறிய பிரதமர், வரும் ஆண்டுகளில் ட்ரோன் தொழில்நுட்பம் நாட்டில் விரிவடையும் என்றார்.

மேலதிக செய்திகள்

வட்டுக்கோட்டையில் பயங்கரம் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை. (பிந்திய இணைப்பு)

கடந்த 24 மணித்தியாலங்களில் 1101 சந்தேக நபர்கள் கைது?

திருமண ஊர்வலத்தில் லாரி புகுந்ததில் 6 பேர் பலி

கொலைச் சந்தேக நபர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சட்டசபை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் யோசனை!

Leave A Reply

Your email address will not be published.