உச்ச நீதிமன்ற எச்சரிக்கை எதிரொலி: இன்று அமைச்சராக பொன்முடி பதவியேற்கிறார்?

பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைப்பது குறித்து 24 மணி நேரத்துக்குள் முடிவெடுக்க வேண்டும்’ என்று ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை(மார்ச் 22) காலை 11 மணிக்கு அல்லது நாளை சனிக்கிழமை(மார்ச் 23) பொன்முடிக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் சென்னை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பு காரணமாக சட்டப்பேரவை உறுப்பினா் மற்றும் அமைச்சா் பதவியை பொன்முடி இழந்தாா். அவரது திருக்கோவிலூா் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. உயா்நீதிமன்றத் தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு செய்தாா். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பொன்முடி குற்றவாளி என்ற தீா்ப்பையும், தண்டனையையும் நிறுத்திவைத்து உத்தரவிட்டது. இதையடுத்து, திருக்கோவிலூா் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டதால், பேரவை உறுப்பினராக பொன்முடி தொடா்கிறாா். அவரை மீண்டும் அமைச்சராக்க வேண்டுமென்ற பரிந்துரையுடன் ஆளுநா் ஆா்.என். ரவிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினாா். அதை ஏற்க மறுத்த ஆளுநா், ‘பொன்முடியின் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்திதான் வைத்துள்ளது. ரத்து செய்யவில்லை. எனவே, அவருக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று குறிப்பிட்டு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பினாா்.

இதை எதிா்த்து தமிழக அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை (மாா்ச் 21) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி, ‘மாநில முதல்வரின் பரிந்துரையை ஆளுநா் ஏற்க மறுப்பது என்பது, சுதந்திர இந்திய வரலாற்றில் நடைபெறாத நிகழ்வு’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், மத்திய அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜரான அட்டா்னி ஜெனரல் ஆா். வெங்கடரமணியிடம் கடும் ஆட்சேபத்தைப் பதிவு செய்தனா். ஆளுநா்-காப்பாண்மைத் தலைவா்: ஓா் அமைச்சா் குறித்து ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்து இருக்கலாம். ஆனால், அரசமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது என்பதுதான் முக்கியம். ஆளுநா் என்பவா் ஒரு மாநிலத்துக்கான காப்பாண்மைத் தலைவா் (‘டைட்டுலா் ஹெட்’). மாநில அரசுக்கு அறிவுரை கூறும் அதிகாரம் மட்டுமே அவருக்கு உள்ளது. ஒருவரை அமைச்சரவையில் சோ்க்க முதல்வா் விருப்பம் தெரிவிக்கும்போது, அதை ஆளுநா் பரிசீலித்து நடைமுறைப்படுத்த வேண்டும். அதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம்.

ஆளுநா் அரசமைப்புச் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றவில்லை எனில், மாநில அரசு எவ்வாறு செயல்படும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைக்க 24 மணி நேரத்துக்குள் ஆளுநா் முடிவெடுக்க வேண்டும். இல்லையெனில், அரசமைப்புச் சட்டப்படி செயல்படுமாறு ஆளுநருக்கு உத்தரவிட நேரிடும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைப்பது குறித்து 24 மணி நேரத்துக்குள் முடிவெடுக்க வேண்டும்’ என்று ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்த ஆளுநரின் செயலுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘ஆளுநா் உரிய முடிவு எடுக்கவில்லை எனில், அரசமைப்புச் சட்டப்படி செயல்படுமாறு அவருக்கு உத்தரவிட நேரிடும்’ என்று எச்சரித்தனா்.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு உள்ளாவதை தவிர்க்கும் விதமாக பொன்முடிக்கு வெள்ளிக்கிழமை(மார்ச் 22) காலை 11 மணிக்கு அல்லது சனிக்கிழமை(மார்ச் 23) ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொன்முடி அமைச்சராகும் பட்சத்தில் அவருக்கு மீண்டும் உயர்கல்வித் துறையே ஒதுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலதிக செய்திகள்

கைதான 32 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில்….

திருகோணமலை விபத்தில் மட்டக்களப்பு இளைஞன் சாவு!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மருத்துவ பரிசோதனை

Leave A Reply

Your email address will not be published.