காஸாவுக்கு மனிதாபிமான உதவிகளைக் கொண்டுசேர்ப்பதில் இஸ்ரேலுடன் ஒத்துழைப்பது முக்கியம்.

காஸாவுக்கு மனிதாபிமான உதவிகளைக் கொண்டுசேர்ப்பதில் இஸ்ரேலுடன் ஒத்துழைப்பது சிங்கப்பூருக்கு முக்கியம் என வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

பணி நிமித்தமாக மத்திய கிழக்கிற்கு தாம் மேற்கொண்ட 10 நாள் பயணத்தின்போது இஸ்ரேலியத் தலைவர்களை ஈடுபடுத்தியதற்கு இது முக்கியக் காரணம் என்று அவர் திங்கட்கிழமை (மார்ச் 25) கூறினார்.

இப்போதும் எதிர்காலத்திலும் காஸாவுக்கு மனிதாபிமான உதவிகளை சிங்கப்பூர் வழங்க வேண்டுமாயின் இஸ்ரேலின் ஒத்துழைப்பு தேவைப்படுவதை டாக்டர் விவியன் சுட்டினார்.

சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்திலிருந்து சிங்கப்பூர் திரும்பியதும் இங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிங்கப்பூரின் கருத்துகளைத் தெளிவாக வெளிப்படுத்தியதாகச் சொன்னார். காஸாவில் மனிதாபிமான சூழ்நிலை குறித்து சிங்கப்பூர் கவலை கொள்வதும் ஹமாஸ் தாக்குதலுக்கு இஸ்ரேலின் பதில் நடவடிக்கை அளவு கடந்து போயிருப்பதும் அத்தகைய கருத்துகளில் அடங்கும்.

மத்திய கிழக்கிற்கு தாம் மேற்கொண்ட பயணம் அவசியமான ஒன்று என வர்ணித்த டாக்டர் விவியன், இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து சிங்கப்பூரின் அரபு பங்காளித்துவ நாடுகளுடன் கலந்தாலோசிப்பதும் மற்றொரு நோக்கம் என்றார்.

வெளியுறவு அமைச்சு தலைமையகத்தில் பேசிய அவர், “உயர்மட்ட அளவில் எங்களுக்கு முழு அனுமதி கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. தலைவர்கள் எங்களுக்கு வெளிப்படையான கருத்துகளை வழங்கினர்,” என்று சொன்னார்.

கத்தார் தலைநகர் தோஹாவுடன் டாக்டர் விவியன் தமது மத்திய கிழக்கு பயணத்தைத் தொடங்கினார். இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே சண்டைநிறுத்த பேச்சுவார்த்தை அங்கு நடைபெறுகிறது.

அதையடுத்து ஜோர்தானுக்குச் சென்ற அவர், காஸாவுக்கு சிங்கப்பூர் அனுப்பிய மனிதாபிமான உதவிப் பொருள்கள் வந்துசேர்வதைப் பார்வையிட்டார். பின்னர் ரமல்லாவுக்குச் சென்ற அவர், அங்கு பாலஸ்தீனத் தலைவர்களுடன் பேசினார்.

அதைத் தொடர்ந்து, அபுதாபி, கெய்ரோ, ரியாத் ஆகிய நகர்களுக்கு அவர் சென்றார்.

மத்திய கிழக்கில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் பாதுகாத்துக்கொள்ள தேசிய நலன் இருப்பதாகவும் இந்த விவகாரத்தை அவை அனைத்தும் ஒரே மாதிரியாக பார்க்கவில்லை என்றும் டாக்டர் விவியன் கூறினார்.

அப்படி இருந்தாலும், உடன்பாட்டில் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. காஸாவில் வன்முறையை நிறுத்த வேண்டியதற்கான அவசியம், பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான அவசியம், தற்போதுள்ள நிலவரத்தையும் தாண்டி மனிதாபிமான உதவிகளை உடனடியாக வழங்க வேண்டியதன் அவசியம் உள்ளிட்டவை அந்தப் பொதுவான அம்சங்கள்.

Leave A Reply

Your email address will not be published.