நீர்கொழும்பு மசாஜ் நிலைய ஊழியர்களில் HIV தொற்று கண்டறியப்பட்ட இருவரில் , 15 வயது சிறுமியும் ஒருவர்!

நீர்கொழும்பு நகரைச் சுற்றி மூடப்பட்ட 53 மசாஜ் மையங்களில் பணிபுரிந்த 120 இளம் பெண்களில், எச்.ஐ.வி-எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் 15 வயதுடைய மைனர் பெண் என காவல்துறை கண்டறிந்துள்ளது.

இந்த சிறுமி தனது உறவினர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியே வந்ததையடுத்து, சிலர் அவளை இந்த மசாஜ் மையத்திற்கு அழைத்துச் சென்று அங்கு அதிகளவானவர்களுடன் பாலுறவு கொள்ள வற்புறுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியமை தெரியவந்துள்ளது.

மதுவுக்கு அடிமையானவர்களை மருத்துவ மனைகளுக்கு அனுப்பும் “சவிய” நிகழ்ச்சியின் போது நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் குடிப்பழக்கம் உள்ள ஒருவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட போது , அவர் நீர்கொழும்பு பகுதியிலுள்ள மசாஜ் மையங்களுக்கு வழமையாக செல்பவர் என அறியவந்துள்ளது.

இந்த தகவலினை அறிந்த பின் , நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 53 மசாஜ் நிலையங்கள் , நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் எரிக் பெரேராவின் தலைமையில் , நீர்கொழும்பு பொலிஸாரால் அவசர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த சுற்றிவளைப்பு , சுமார் ஒரு வார காலம் நடந்தது.

இந்நடவடிக்கையின் போது, இந்த மசாஜ் நிலையங்களில் சேவைகளை வழங்கிய 120 யுவதிகள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு, அவர்களை வைத்திய பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போது, அவர்களில் இருவர் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்கள் எனவும், 08 பேர் ஏனைய சமூக நோய்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் எனவும் தெரியவந்துள்ளது.

எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட இருவரில் , 15 வயது சிறுமியும் ஒருவர்.

15 வயது சிறுமியுடன் பாலுறவு கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான இருவருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையின் போது நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எந்தவொரு மசாஜ் நிலையமும் முறையான சட்ட அனுமதியின் கீழ் இயங்கவில்லை எனவும் , நகராட்சியின் அனுமதியின்றி , உரிமம் இல்லாமல் இயங்கி வரும் இந்த மசாஜ் மையங்களை கட்டுப்படுத்த , நகராட்சி ஆணையருக்கும் அதிகாரமில்லை என அறிய முடிகிறது.

தற்போது, சம்பந்தப்பட்ட மசாஜ் மையங்கள் அனைத்தும் மூடப்பட்டு, அந்த மையங்களின் பெயர் பலகைகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன.

இந்த நிலையில் , நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு, கொச்சிக்கடை மற்றும் சீதுவ பிரதேசங்களில் உள்ள அனைத்து மசாஜ் நிலையங்களையும் மூடுவதற்கு நீர்கொழும்பு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழிலும் கோர விபத்து! விவசாயி ஒருவர் சாவு!!

நீரில் மூழ்கி 4 சிறுவர்கள் பரிதாபச் சாவு!

ஓமந்தையில் கோர விபத்து முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

Leave A Reply

Your email address will not be published.