போதைப்பொருள் கடத்தியவருக்கு மரண தண்டனை.

‘கஞ்சா மனிதர்’ என்று தன்னை அழைத்துக்கொண்ட சீட் போ ஜிங் எனும் ஆடவருக்கு, போதைப்பொருள் கடத்தியதற்காக ஏப்ரல் 2ஆம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் 4.5 கிலோகிராம் கஞ்சா கலவையைக் கடத்தியதாகக் கூறப்பட்டது.

தான் போதைப்பொருள் கடத்தவில்லை என்றும் கஞ்சாவில் உள்ள ஒரு வேதிப்பொருள் குறித்து ஆய்வு செய்வதற்காக அதை வைத்திருந்ததாகவும் சீட் கூறியதை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

சிங்கப்பூர் சட்டத்தின்கீழ், ஒரு கிலோகிராமுக்குமேல் எடையுள்ள கஞ்சாவைக் கடத்தியது நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும்.

2018ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி அப்போது 28 வயதான சீட்டும் அவரது காதலியும் தெம்பனிசில் கைது செய்யப்பட்டனர்.

அவரது வாடகை காரில் ஐந்து பொட்டலங்களில் இருந்த கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. 2022 செப்டம்பரில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடங்கியது.

போதைப்பொருள் வைத்திருந்ததை ஒப்புக்கொண்டதுடன் அதன் தன்மை குறித்துத் தான் அறிந்திருப்பதாகவும் சீட், விசாரணையில் தெரிவித்தார்.

அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் ஒவ்வொன்றும் 2,500 முதல் 4,500 வெள்ளி வரை விலைபோகும் என்று அவர் கூறியிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.