தமிழகத்தில் இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை

மக்களவைத் தேர்தலில், முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தமிழ்நாட்டில் இன்றுடன் பரப்புரை நிறைவடைகிறது. மாலை 6 மணிக்கு மேல் பரப்புரை செய்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. அன்றைய தினம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

பரப்புரை நிறைவைத் தொடர்ந்து வாக்குப்பதிவு முடியும் வரை அமலில் வரும் கட்டுப்பாடுகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ வெளியிட்டுள்ளார்.

வாக்குப்பதிவு வரையிலான கட்டுப்பாடுகள்

அதில், இன்று மாலை 6 மணிக்கு மேல் தொகுதிக்கு தொடர்பு இல்லாத அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள், வாக்காளர்கள் அல்லாதோர், தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருமண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கி இருக்கிறார்கள் என கண்டறியப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 6 மணிக்கு மேல் பொதுக்கூட்டதையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ, பங்கேற்கவோ கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதளங்கள், குறுஞ்செய்தி வாயிலாகவும் பரப்புரை செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 ஆண்டுகள் சிறை – தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

பொதுமக்களை ஈர்க்கும் வகையில் எந்தவொரு இசை நிகழ்ச்சி, பொழுதுபோக்கு நிகழ்ச்சியும் கூடாது என்றும், தேர்தல் பரப்புரைக்கான நேரம் முடிந்த பின், பரப்புரை மேற்கொண்டால் 2 ஆண்டுகள் சிறை அல்லது அபாரதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, நட்சத்திர பேச்சாளர்கள் உள்ளிட்ட வாகன அனுமதிகள் இன்று மாலை 6 மணிக்கு பின் செயல்திறனற்றதாகிவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வாகன அனுமதியும்… கட்டுப்பாடும்…

வாக்குப்பதிவு நாளில், சில கட்டுப்பாடுகளுடன் ஒவ்வொரு வேட்பாளருக்கும் வாகன அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி மக்களவைத் தொகுதி முழுவதும் சொந்த பயன்பாட்டிற்கான ஒரு வாகனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. தேர்தல் முகவரின் பயன்பாட்டிற்கும் ஒரு வாகனத்திற்கு அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர , வேட்பாளர்கள் வாகனங்களை ஏற்பாடு செய்து கொடுக்கக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

2 நபர்களை மட்டுமே கொண்ட, தற்காலிக பிரசார அலுவலகத்தை வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்கு வெளியே அமைத்துக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுளளது. தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலதிக செய்திகள்

சர்வோதய இயக்கத்தின் ஸ்தாபகர் ஆரியரத்ன அவர்களது இறுதிக் கிரியைகள் சனிக்கிழமை

1900 ரூபாவுக்கு கொத்து ரொட்டி வேண்டாம் : வெளிநாட்டவரை துரத்திய ரவுடி வியாபாரி கைது…

Leave A Reply

Your email address will not be published.