பட்லர் சதம் கைகொடுக்க, ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டில் ‘திரில்’ வெற்றி.

ஐ.பி.எல்., லீக் போட்டியில் பட்லர் சதம் கைகொடுக்க, ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டில் ‘திரில்’ வெற்றி பெற்றது. சுனில் நரைன் சதம் வீணானது.

இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 17 வது சீசன் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா, ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

கோல்கட்டா அணிக்கு சுனில் நரைன், பில் சால்ட் ஜோடி துவக்கம் கொடுத்தது. பவுல்ட் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய பில் சால்ட் (10), அவேஷ் கானில் அசத்தல் ‘கேட்ச்சில்’ வெளியேறினார். அடுத்து நரைன், ரகுவன்ஷி இணைந்தனர். பவுல்ட் வீசிய போட்டியின் 5வது ஓவரை எதிர்கொண்ட ரகுவன்ஷி, மூன்று பவுண்டரி அடித்து மிரட்டினார்.

போட்டியின் 8 வது ஓவரில் பந்து வீச வந்தார் அஷ்வின். இதன் 4, 5 வது பந்தில் பவுண்டரி அடித்து அசத்திய நரைன், பின் வந்த சகால் பந்தையும் சிக்சருக்கு அனுப்பினார். ரகுவன்ஷி (30), ஸ்ரேயாஸ் (11) விரைவில் கிளம்பினர். சகால் வீசிய 16வது ஓவரில் ரன்மழை பொழிந்தார் நரைன். 2 சிக்சர், 2 பவுண்டரி என அடிக்க, மொத்தம் 23 ரன் எடுக்கப்பட்டன.

நரைன் 49 வது பந்தில் சதம் எட்டினார். மீண்டும் வந்த அவேஷ் கான், இம்முறை ரசலை (13) அவுட்டாக்கினார். நரைன் 109 ரன் எடுத்த நிலையில், பவுல்ட் பந்தில் போல்டானார். கோல்கட்டா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 223 ரன் குவித்தது. ரிங்கு சிங் (20) அவுட்டாகாமல் இருந்தார்.

கடின இலக்கைத் துரத்திய ராஜஸ்தான் அணிக்கு பட்லர், ஜெய்ஸ்வால் (19) ஜோடி சுமார் துவக்கம் தந்தது. சஞ்சு சாம்சன் (12), ரியான் பராக் (34) நிலைக்கவில்லை. துருவ் (2), அஷ்வின் (8), ஹெட்மயர் (0) கைகொடுக்கவில்லை. பட்லர் ‘தனி ஒருவனாக’ போராடினார். பாவெல் 13 பந்தில் 26 ரன் எடுத்தார்.

கோல்கட்டா பீல்டிங், பவுலிங் சுமாராக அமைய, ராஜஸ்தான் பக்கம் வெற்றி திரும்பியது. ஹர்ஷித் ராணா வீசிய 19 வது ஓவரில் பட்லர், 2 சிக்சர், 1 பவுண்டரி உட்பட 19 ரன் எடுத்தார். வருண் சக்ரவர்த்தி வீசிய கடைசி ஓவரில், ராஜஸ்தான் வெற்றிக்கு 9 ரன் தேவைப்பட்டன. முதல் பந்தில் சிக்சர் அடித்த பட்லர், சதம் கடந்து மிரட்டினார். பின் 5வது பந்தில் 2, கடைசி பந்தில் 1 ரன் எடுக்க ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 224 ரன் எடுத்து ‘திரில்’ வெற்றி பெற்றது. பட்லர் (107) அவுட்டாகாமல் இருந்தார்.

கோல்கட்டா (223/6) இலக்கைத் துரத்திய ராஜஸ்தான் (224/8), ஐ.பி.எல்., அரங்கில் அதிகபட்ச ரன்னை சேஸ் செய்த அணி வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. முன்னதாக 2020ல் பஞ்சாப் (223/2) இலக்கை, வெற்றிகரமாக ‘சேஸ்’ செய்தது ராஜஸ்தான் (226/6).

ஐதராபாத் அணிக்கு எதிராக 109 ரன் எடுத்த கோல்கட்டாவின் சுனில் நரைன், ‘டி-20’ கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். முன்னதாக சமீபத்தில் டில்லிக்கு எதிராக 85 ரன் எடுத்ததே அதிகம்.

ஐ.பி.எல்., அரங்கில் ஈடன் கார்டன் மைதானத்தில் சதம் அடித்த முதல் கோல்கட்டா வீரர் ஆனார் சுனில் நரைன் (109). இது இம்மைதானத்தில் கோல்கட்டா அணி பங்கேற்ற 84வது போட்டி.

* இதற்கு முன் 2008ல் பிரண்டன் மெக்கலம் (158) பெங்களூரு, 2023ல் வெங்கடேஷ் (104) மும்பை மைதானங்களில் சதம் அடித்து இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.