தமிழரசுக் கட்சி வழக்கு மே 31 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு! – 7 எதிராளிகள் மூன்று விதமான நிலைப்பாடுகளில் ஆட்சேபனை மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் மே 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கின் ஏழு எதிராளிகளான கட்சியின் உத்தியோகத்தர்கள் மூன்று விதமான நிலைப்பாடுகளை எடுத்து தங்கள் ஆட்சேபனை மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

எட்டாவது எதிராளியாகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட இரத்தினவடிவேல் தரப்பு தமது ஆட்சேபனையைத் தாக்கல் செய்யவும், எதிராளிகளின் ஆட்சேபனை மனுக்களைப் படித்து வழக்காளி தங்கள் தரப்பு கருத்தைச் சமர்ப்பிக்கவும் கால அவகாசம் அளித்து மே 31 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார் திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா.

கட்சி யாப்புக்கு முரணாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும், பொதுக்குழு வாக்களிப்பில் கடைசியாக 20 பேர் வரை சேர்க்கப்பட்டமை மாத்திரமே நேர்ந்த தவறு என்றும், ஆனால் அது கூட தலைவர் தெரிவின் முடிவை மாற்றவில்லை என்ற சாரப்படவும் தெரிவித்து ஆறாவது எதிராளியான சுமந்திரன் தமது ஆட்சேபனை மனுவை கடந்த தவணையின்போதே தாக்கல் செய்திருந்தார் என்பது தெரிந்ததே.

அதுவே கட்சியின் அரசியல் குழுவின் நிலைப்பாடு என்று தெரிவித்து, அதே சாரப்பட்ட ஆட்சேபனையைக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், நிர்வாகக் செயலாளர் குலநாயகம் ஆகியோர் அவர்களின் சட்டத்தரணிகள் மூலம் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

கட்சியின் தற்போதைய தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் வழக்காளியின் பல கோரிக்கைகளை ஏற்க மறுத்த அதேசமயம், நீதிமன்றத்தில் இவ்வழக்கையொட்டி சமர்ப்பிக்கப்பட்டுள்ள கட்சியின் யாப்பு அல்லாத பிறிதொன்றை யாப்பாகக் காட்டி அதன் அடிப்படையில் கட்சியின் கூட்டங்கள் ஒழுங்காகவே கூட்டப்பட்டிருக்கின்றன, முறையாகவே நடந்திருக்கின்றன என்ற அடிப்படையில் ஆட்சேபனையைச் சமர்ப்பித்தனர்.

சிறிதரன், குகதாசன் ஆகிய எதிராளிகளின் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தாங்கள் வழக்காளி சமர்ப்பித்த எல்லா விடயங்களையும் ஏற்று, அங்கீகரித்து, அதன் அடிப்படையில் வழக்கைத் தீர்க்க விரும்புகின்றனர் என்ற கருத்தில் தங்கள் ஆட்சேபனை மனுவை சமர்ப்பித்திருக்கின்றனர் என்று தெரிவித்தார்.

ஆறாவது எதிராளியான சுமந்திரன் கட்சியின் அரசியல் குழு எடுத்த தீர்மானம் அல்லது வழிகாட்டல் படி ஆட்சேபனை மனுவைத் தாக்கல் செய்தாலும், கட்சியில் கொள்கை ரீதியான இத்தகைய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் மத்திய குழுவுக்கு உண்டு என்றும் கே.வி.தவராசா குறிப்பிட்டார்.

இதேசமயம் இந்த வழக்கின் இடையீட்டு எதிராளியாக வர விண்ணப்பித்துள்ள இரத்தினவடிவேலின் மனுவை வழக்காளியோ ஏனைய எதிராளிகளோ ஆட்சேபிக்காத நிலையில் அவரை எட்டாவது எதிராளியாகச் சேர்க்கவும், அதற்கேற்ப வழக்குப் பதிவுகளை மாற்றவும் நீதிபதி அனுமதி அளித்தார்.

எட்டாவது எதிராளியின் ஆட்சேபனை மற்றும் வழக்காளியின் கருத்துரை ஆகியவற்றுக்காக வழக்கு மே 31ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதால் அந்தத் திகதியிலும் வழக்கின் விசாரணை ஆரம்பமாகாது என்றே கருதப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.