சிங்கப்பூர் வரும் இந்தியன் தாத்தா (Video)

ரசிகர்கள் பேரார்வத்துடன் காத்திருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தை விளம்பரம் செய்வதற்காக உலகநாயகன் கமல்ஹாசன் சிங்கப்பூர் வருகிறார்.

அவருடன் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்துள்ள சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் வருகை தருகின்றனர்.

மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மண்டபத்தில் சனிக்கிழமை ஜூன் 29ஆம் தேதி மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெறும் ரசிகர்கள் சந்திப்பில் அவர்கள் கலந்துகொள்கின்றனர்.

லைக்கா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் 3.டாட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்யும் இந்நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 1,200 பேர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சிக்கு நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை என்றாலும் இலவச நுழைவுச்சீட்டு இன்றி அரங்கத்திற்குள் அனுமதி இல்லை என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த புதன்கிழமை முதல் அப்போலோ ஃபூட் வில்லேஜில் வழங்கப்பட்ட நுழைவுச்சீட்டுகள் அனைத்தும் மிக விரைவாகத் தீர்ந்துவிட்டன என்று தி பனானா லீஃப் அப்போலோ உணவகத்தின் உரிமையாளர் திரு சங்கரநாதன் தெரிவித்தார்.

லைக்கா புரொடக்‌ஷன்ஸ், ரெட் ஜயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜூலை 12ஆம் தேதி வெளிவரவுள்ளது. பெரும் பொருள் செலவில், இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி ஜூன் 25ஆம் தேதி வெளியாகியது.

‘இந்தியன் 2’ திரைப்படத்தில் கமல்ஹாசன் செய்ததை யாராலும் செய்ய முடியாது என்றும் முதன்முதலாக இந்தியன் திரைப்படத்தில் தாத்தா வேடத்தில் கமலைப் பார்த்தபோது இருந்த அதே சிலிர்ப்பு இப்போதும் இருந்தது என்றும் இயக்குநர் ஷங்கர் அந்நிகழ்ச்சியில் கமலை மெச்சியுள்ளார்.

கடந்த 1996ஆம் ஆண்டில் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம், 28 ஆண்டுகளுக்குப் பிறகு திரைக்கு வரவிருக்கிறது. இத்திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

இரண்டாம் பாகத்தில் அப்பா கதாபாத்திரத்தில் முதல் பாகத்தில் வந்த அதே வயதான தோற்றத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார். இந்தப் பாகத்தில் மேலும் பல விதமான தோற்றங்களில் கமல்ஹாசன் தோன்றுவதை முன்னோட்டக் காட்சிகளில் காணமுடிகிறது.

திரைப்படம் வெளிவர சில நாள்களே உள்ள நிலையில் இந்தியாவின் பல இடங்களுக்குப் படக்குழுவினர் சென்று திரைப்படத்தை அறிமுகம் செய்து விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

நீண்ட காலமாகத் தயாரிக்கப்பட்டு வந்த ‘இந்தியன் 2’ திரைப்படம், பல சவால்களைத் தாண்டி வெளிவருகிறது. படப்பிடிப்பின்போது 2020ஆம் ஆண்டு நடந்த ஒரு விபத்தில் மூவர் மரணமடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

இத்திரைப்படத்தில் நடித்துவந்த நகைச்சுவை நடிகர் விவேக் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உயிரிழந்தார். அதே ஆண்டு அக்டோபர் மாதத்தில் மலையாள நடிகர் நெடுமுடி வேணு மரணமடைந்தார். முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், விவேக், மனோபாலா போன்ற மறைந்த நடிகர்களை நினைவுகூர்ந்தார்.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இத்திரைப்படம் வெளிவருகிறது.

சிங்கப்பூர் மட்டுமல்லாது மலேசியாவிலும் திரைப்பட அறிமுக நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.