கிழக்குமைய அரசியல் – சில அவதானங்கள் (2) : சண் தவராஜா

கிழக்குமைய அரசியல் – சில அவதானங்கள் (2) :   சுவிசிலிருந்து சண் தவராஜா

அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என்பவை காரணமாக கிழக்கு தனித்து இயங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கும் பலரும் கையில் எடுத்துள்ள மற்றுமொறு விடயம் முஸ்லிம்களின் மேலாண்மையை ஒடுக்குவது.

இந்த நோக்கத்துக்காக எந்தச் சாத்தானுடனும் கைகோர்க்க அவர்கள் தயாராக உள்ளனர். ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பக் கட்டங்களில் கணிசமானோர் கைகோர்த்து நின்றாலும் பின்னாளில் போராட்டத்தின் விரோதிகளாக முஸ்லிம்கள் ஆக்கப் பட்டார்கள். அண்மைக் காலம்வரை முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆளும் தரப்புகளுடன் சேர்ந்து நின்று பல்வேறு சலுகைகளை (உரிமைகளை அல்ல) பெற்றுக் கொண்டார்கள் என்பது நிதர்சனம். இதனால் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என்பவற்றில் கிழக்கு முஸ்லிம்கள் பலபடி முன்னேறி உள்ளார்கள் என்பதுவும் மறுக்க முடியாதது. முஸ்லிம் அரசியல்வாதிகளைத் தமிழ் மக்களின் எதிரிகளாக முன்னிறுத்தி தமது அரசியல் இலக்குகளை வெற்றிகொண்ட சிங்கள இனவாதம் தற்போது முஸ்லிம்களைத் தட்டிப் பணியவைக்க கிழக்குத் தனித்துவம் என்ற கருவியைக் கையில் எடுத்துள்ளமை ஒன்றும் வியப்பல்ல. இதிலே மிக நுட்பமாகப் புரிந்து கொள்ள வேண்டிய விடயம் சிங்கள அரசாங்கம் எதுவாக இருந்தாலும் தமிழ் மக்களுக்கோ முஸ்லிம் மக்களுக்கோ சலுகைகளை வழங்கத் தயராக உள்ளதே தவிர உரிமைகள் எதனையும் கிஞ்சித்தேனும் வழங்கத் தயராக இல்லை என்பதே.

ஒடுக்குமுறையின் வலியை நன்கு அனுபவித்த ஒரு இனம் மற்றொரு இனத்தை ஒடுக்குவதற்குத் துணை போகின்றது என்றால் அதனை விட வரலாற்று முரண் எதுவாக இருக்க முடியும்? அதிலும் 1980 களின் நடுப்பகுதி வரை அண்ணன் தம்பியாகப் பழகிய இனங்கள், “புட்டும் தேங்காய்ப் பூவும் போல” ஒன்றாகச் செயற்பட்ட சமூகங்கள் ஒரு குறுகிய கால இடைவெளியில் பரம எதிரிகளைப் போல ஆனது எப்படி?

ஆயுதப் போராட்டத்தின் விளைவு காரணமாக இயக்கங்களில் இணைந்து கொண்ட பலருக்கும் முஸ்லிம் மக்களின் வரலாற்றுப் பங்களிப்பு பற்றித் தெரியாது போனமை ஒன்றும் வியப்பான விடயமல்ல. ஆயுதப் போராட்டம் முளைவிடத் தொடங்கிய காலகட்டத்திலேயே இயக்கங்களில் இணைந்து கொண்ட, அரசியல் களத்திலே முஸ்லிம் சகோதரர்களோடு தோளோடு தோளாக நின்று செயற்பட்ட எம் போன்றவர்களுக்கு முஸ்லிம்களின் போராட்டப் பங்களிப்பு பற்றி நன்கு தெரியும். புளொட், ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப். போன்ற இயக்கங்களில் மேல்மட்டங்களில் கூட முஸ்லிம் போராளிகள் இருந்திருக்கின்றார்கள். பிற்காலத்தில் முஸ்லிம் மக்களில் பலரைக் கொலைசெய்தும், யாழ்ப்பாணக் குடாநாட்டை விட்டு அவர்களை விரட்டியடித்தும் வரலாற்றுக் கறையைப் பூசிக் கொண்ட விடுதலைப் புலிகள் அமைப்பில் கூட முஸ்லிம் போராளிகளின் பங்களிப்பு இருந்திருக்கின்றது. தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் 35 வரையான முஸ்லிம் மாவீரர்களின் கல்லறைகள் உள்ளன.

தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான உறவில் எப்போது விரிசல் உருவாகியது, அது எப்போது விரிவாகியது என்பவை தொடர்பில் ஆழமான பார்வை அவசியமாகின்றது.

ஆயுதப் போராட்டம் 70 களிலேயே ஆரம்பமாகிவிட்ட போதிலும் கூட அது வீறு கொண்டது 83 இல் தமிழ் மக்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட இனப் படுகொலைக்குப் பின்னரேயே. அது வரையும், அதற்குப் பின்னரும் கூட ஆயுதப் போராட்டத்தின் பங்காளிகளாக முஸ்லிம் இளைஞர்கள் இருந்திருக்கின்றார்கள். “காட்டிக் கொடுப்பாளர்கள்” என முத்திரை குத்தப்பட்டுக் கொலை செய்யப் பட்டவர்களிலோ, காவல்துறையைச் சேர்ந்தவர்களிலோ கூட ஆரம்பத்தில் முஸ்லிம்கள் இடம் பிடித்திருக்கவில்லை.

1984 யூன் மாதம் முதலாம் திகதி சிறி லங்கா அமெரிக்கத் தூதுவராலயத்தில்  இஸ்ரேலின் நலன் காக்கும் பிரிவு திறந்து வைக்கப்பட்டது. அதே காலகட்டத்திலேயே இஸ்ரேலில் பயிற்சியை முடித்துக் கொண்ட விசேட அதிரடிப் படையினர் மட்டக்களப்பில் களமிறக்கப் பட்டார்கள். இதன் பின்னான காலப் பகுதியிலேயே தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் திட்டமிடப்பட்ட வகையில் முரண்பாடுகள் உருவாக்கப்பட்டன, ஊதிப் பெருப்பிக்கப்பட்டன. தத்துவார்த்த அடிப்படையில் வளர்ந்த இயக்கங்கள் எனத் தங்களைத் தாங்களே கற்பனை செய்துகொண்ட இயக்கங்கள் கூட இஸ்ரேலின் நலன் காக்கும் பிரிவு பற்றியோ அதன் நாசகாரத் திட்டங்கள் பற்றியோ கரிசனை கொண்டிருக்கவில்லை. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் இணைந்து பயிற்சி பெற்று, அதற்கூடாக இஸ்ரேல் பற்றியும், அந்த நாட்டு உளவுப் பிரிவின் தந்திரோபாயங்கள் பற்றியும் கண்டும், கேட்டும் நேரடியாக அறிந்திருந்தும் கூட அவர்கள் அலட்சியமாக இருந்தது மட்டுமன்றி, மொசாட் உளவுப் பிரிவின் தந்திரோபாயங்களுக்குப் பலியாகவும் ஆகியிருந்தனர். (இதே இஸ்ரேல் நாட்டில் பிற்காலத்தில் தமிழ்ப் போராளிகளும், சிங்களப் படையினருடன் அருகருகாகப் பயிற்சி பெற்றார்கள் என்பது பிந்திய வரலாறு)

இஸ்ரேல் நலன்காக்கும் பிரிவின் அபாயத்தை முஸ்லிம்கள் நன்கு உணர்ந்திருந்தனர். அதனால், அன்றைய தினம் கடையடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். முஸ்லிம் பிரதேசங்கள் எங்கும் வீதிகளில் ரயர்கள் போட்டு எரிக்கப்பட்டு போக்குவரத்துத் தடை செய்யப்பட்டது. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை ஒடுக்கவே இஸ்ரேல் நலன்காக்கும் பிரிவை அப்போதைய அரசுத் தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்தனா அழைத்திருந்தார். ஆனால், அதனைப் பற்றித் தமிழ் இயக்கங்களோ, தமிழ் மக்களோ அலட்டிக் கொள்ளவில்லை. மாறாக, தமிழ்ப் போராட்டத்தையும் அழிவிலிருந்து காக்கும் நோக்குடன் கிழக்கு முஸ்லிம்கள் வீதிக்கு இறங்கினர்.

முஸ்லிம்களின் போராட்டம் பல இளைஞர்களின் கைதுகளால் ஒடுக்கப்பட்டது. ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கைது செய்யப்பட்டு காவல் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்களுடன் முஸ்லிம் இளைஞர்களும் அடைக்கப்பட்டார்கள். அது மாத்திரமன்றி தமிழ் இளைஞர்களை விடவும் அதிகமாகத் தாக்கப் பட்டார்கள். சில இடங்களில் முஸ்லிம் இளைஞர்களைத் தாக்குமாறு தமிழ் இளைஞர்களை காவல்துறையினர் தூண்டினர். எனினும், முஸ்லிம் இளைஞர்களைத் தாக்க தமிழ் இளைஞர்கள் முன்வரவில்லை.

முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்ட ஒருசில மணிநேர இடைவெளியிலேயே – பின்னாளில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசிற்குத் தமைமை தாங்கிய – சட்டத்தரணி எம்.எச்.எம். அஷ்ரப் மட்டக்களப்பு பிரதான காவல் நிலையத்துக்கு நேரில் வந்து கூண்டில் இருந்த இளைஞர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்போது தமிழ் இளைஞர்களுக்கும் அவர் உதவிக்கரம் நீட்டினார். அப்போது சிறைக்கைதியாக அடைபட்டிருந்த நான் ஒரு உண்மையான அரசியல் தலைவரை நேரில் தரிசிக்க முடிந்தது. எங்களைப் போன்றவர்களுக்கு அவரால் பெரிதாக எதுவும் உதவியிருக்க முடியாது. ஏனெனில், நாங்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டிருந்தோம். ஆனால், அந்த நேரத்தில் அவரின் வார்த்தைகள் மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் ஆயிரக் கணக்கான தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்ட போதிலும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடங்களுக்கு நேரில் சென்று அவர்களைச் சந்திக்க தமிழ் அரசியல்வாதிகள் எவரும் துணியவில்லை என்பது அஷ்ரப் அவர்களின் மீதான மரியாதை மேலும் உயரக் காரணமானது.

இந்தக் கடையடைப்புச் சம்பவம் தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரித்தாளும் இஸ்ரேலின் செயற்திட்டத்தை நிச்சயம் துரிதப் படுத்தியிருக்கும் எனலாம். மறுபுறும், முஸ்லிம்களின் தலைவராகப் பரிணமிக்க வேண்டிய தேவையை அஷ்ரப் அவர்களுக்கு உணர்த்திய தருணமாகவும் இருக்கலாம். 84 காலப் பகுதியில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்ந்த மக்களுக்கு தமிழ் முஸ்லிம் முரண்பாடு எவ்வாறு தீவிரமாகியது என்பது ஞாபகத்திற்கு வரக்கூடும். மோதலில் சம்பந்தப் பட்டவர்கள் எந்தத் தரப்பினராக இருந்தாலும் கூட, மோதல்கள் யாவும் இயல்பாக உருவாகியவை அல்ல என்பதும் தெரிந்திருக்கக் கூடும். சம்பவங்களை விடவும் வதந்திகளே இந்தக் காலகட்டத்தில் அதிகமாக உலவின. தமிழ் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு முதன்முதலாக இடம்பெயர வேண்டிய சூழல் இதன்போது உருவாகியது என்றாலும் கூட, எல்லைப் புறங்களில் வசித்த முஸ்லிம் மக்களும் இந்தக் கதிக்கு ஆளாக வேண்டியிருந்தது.

இதே காலகட்டத்திலேயே முஸ்லிம் ஊர்காவல்படையின் தோற்றம் நிகழ்ந்தது. முஸ்லிம் மக்களை விடுதலைப் புலிகளிடம் இருந்து காப்பது என்ற ஒற்றை நோக்குடனேயே உருவாக்கப்பட்ட ஊர்காவல்படை தன்னுடைய பணியை அளவுக்கு அதிகமாகவே செய்தது என்பதை நாம் அறிவோம். இந்த ஊர்காவல்படையின் பிதாமகனும் இஸ்ரேலிய மொசாட் உளவுப் பிரிவே.
அன்று தோன்றிய தமிழ்-முஸ்லிம் முரண்பாட்டைத் தீர்த்து வைப்பதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகள் இரண்டு தரப்பிலும் முன்னெடுக்கப்படவில்லை. தமிழர் மத்தியில் தீர்மானகரமான சக்திகளாக விடுதலைப் புலிகள் மாறியதைப் போலவே, முஸ்லிம்கள் மத்தியில் ஆயுதம் ஏந்திய முஸ்லிம் ஊர்காவல் படையினரும், புலனாய்வாளர்களும் உருவாகினர். குடிமக்கள் சமூகத்தின் குரல்கள் இரண்டு தரப்பிலும் அமுங்கிப் போனதன் விளைவை இன்றுவரை இரண்டு சமூகங்களும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.

1984 காலகட்டத்தில் தொடங்கிய தமிழ்-முஸ்லிம் மோதல்கள் அடுத்தடுத்துத் தொடர்ந்து கொண்டிருந்தாலும் ஆயுதப் போராட்டத்தில் முஸ்லிம் இளைஞர்கள் தம்மை இணைத்துக் கொள்வது 1990 யூனில் இரண்டாம் கட்ட ஈழ யுத்தம் ஆரம்பமாகும் வரை நீடிக்கவே செய்தது. இந்திய இராணுவம் தமிழ் மண்ணில் நிலை கொண்டிருந்த காலகட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பலவீனமாக இருந்த விடுதலைப் புலிகள் இறுதிவரை தாக்குப் பிடிக்கக் கூடியதாக இருந்ததென்றால் அது முஸ்லிம் மக்களின் உதவி இல்லாமல் நிகழ்ந்திருக்கவில்லை. 2002 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஓட்டமாவடி-நாவலடி பகுதியில் முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான வயல்காணிகளைத் திருப்பி வழங்கும் நிகழ்வு ஒன்றில் பேசும் போது விடுதலைப் புலிகளின் அப்போதைய மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கரிகாலன் அது குறித்துப் பேசியதை நேரில் கேட்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது.

இத்தகைய வரலாறு பலரும் அறிந்தவையே. ஆனால், பொதுவெளியில் பலரும் அதுபற்றிப் பேசுவதில்லை. இன உணர்வில் பொங்கித் தவிப்பவர்களுக்கு தமக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகள், கொடுமைகள், பாரபட்சம் போன்றவை மாத்திரமே ஞாபகத்தில் இருக்கும். தம்மிடம் இருக்கும் இனவெறியை அவர்கள் கணக்கில் கொள்வதில்லை.

1956 இல் தாய்மொழிக் கல்வித் திட்டம் அமுலுக்கு வந்தது. அதனை அறிமுகஞ் செய்வதற்கான காரணங்களுள் ஒன்றாக அப்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான அரச உயர்பதவிகளை வகித்த யாழ்ப்பாண மேட்டுக்குடித் தமிழர்களிடம் இருந்து பதவிகளைப் பறித்து சிங்கள மேட்டுக்குடியினரின் கைகளில் வழங்குவது ஒன்றாக இருந்தது. அன்றைய நிலைமை சிங்கள மக்களுக்கு மாத்திரமன்றி, யாழ் குடாநாட்டுக்கு வெளியே வசித்த மூவின மக்களுக்கும் கூடப் பிடித்தமானதாக இருக்கவில்லை. யாழ் மேலாதிக்கம் என்ற விடயம் தமிர்களைக் கூடப் பாதித்தது. பின்னாளில் தரப்படுத்தல் அறிமுகம் செய்யப்பட்டு, யாழ் குடாநாட்டிற்கு வெளியே வாழும் தமிழ் இளைஞர்களுக்கு அந்த வாய்ப்புக் கிட்டியபோதில், அந்த வாய்ப்பையும் கூடப் பின்கதவு வழியாகக் கவர்வதற்கு யாழ் மேட்டுக்குடியினர் பல்வேறு தந்திரோபாயங்களைப் பாவித்தமை ஒன்றும் இரகசியம் அல்ல.

கிழக்கில் முஸ்லிம்களின் கடந்தகாலச் செயற்பாடுகளும் கிட்டத்தட்ட அத்தகையதே. தமிழ் மக்களுக்கு எதிராக நிறுத்தப்பட்டிருந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் – தமது இருப்பைக் காப்பாற்றிக் கொள்வதற்காக – முஸ்லிம் இளையோருக்கு வேலைவாய்ப்புகளிலும் பதவி உயர்வுகளிலும் முன்னுரிமை வழங்கினார்கள்.

யாழ் மேட்டுக்குடியினர் தமது நியாயமான உரிமைகளைத் திட்டமிட்டுப் பறித்தபோதில் பொங்கியெழாத கிழக்குத் தேசியவாதிகள் முஸ்லிம்கள் அவ்வாறு நடந்து கொள்ளும்போது மாத்திரம் பொங்கியெழுகின்றார்கள் என்றால் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான நோக்கம் மாத்திரமன்றி இனவாத அடிப்படையிலான நோக்கமும் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு சொல்லும்போது முஸ்லிம்கள் அடாத்தாக விடயங்களைச் செய்யும்போது பாராமுகமாக இருக்க வேண்டும் என்பது அர்த்தமல்ல. முஸ்லிம் மக்களோடு, அரசியல் தலைமைகளோடு மனந்திறந்த உரையாடல்கள் நடாத்தப்பட வேண்டும். அவர்களுக்கு விடயங்களை விளக்குவதன் ஊடாக யாரும் யாருடைய உரிமைகளையும் பறித்துவிடக் கூடாது என்பதைப் புரியவைக்க வேண்டும். சகோதரர்கள் இருவருக்கிடையிலான முரண்பாடு எவ்வாறு பேசித் தீர்க்கப்படுகின்றதோ அதைப்போன்றே இந்த விடயமும் அணுகப்பட வேண்டும். இதற்கான முன்நிபந்தனையாக கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட தவறுகளுக்காக இரண்டு தரப்பும் மனந்திறந்த முறையில் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

இரண்டு இனங்களும் நெருங்கிவரும் வகையிலான ஒரு வேலைத்திட்டமாக கடந்த கிழக்கு மாகாணசபை ஆட்சி இருந்தது. தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் இணைந்து அந்த ஆட்சியை அமைத்திருந்தனர். துர்வாய்ப்பாக, அந்த இணைப்பின் உள்ளார்ந்த அர்த்தம் தமிழ் மக்களுக்கோ, முஸ்லிம் மக்களுக்கோ முறையாகப் புரிய வைக்கப்படவில்லை. அவ்வாறு மக்களுக்குப் புரியவைப்பது மக்கள் தலைவர்களின் பணி. ஆனால், நடந்துமுடிந்த பொதுத்தேர்தலில் கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்னடைவைச் சந்தித்தமைக்கான முக்கிய காரணங்களுள் ஒன்றாக இதுவே இருந்தது என்பது எத்தகைய முரண்நகை?

இன்றைய தென்னிலங்கை அரசியல் சூழல் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு உவப்பான ஒன்றாக இல்லை. இந்தத் தருணம் இரண்டு இனங்களும் – விட்டுக் கொடுப்போடு – இணைந்து பயணிக்க வேண்டிய தருணம். எந்தச் சிங்கள இனவாதம் பிரித்தாளும் தந்திரோபாயம் கொண்டு இரண்டு இனங்களையும் மோதவிட்டதோ, அந்த இனவாதத்துக்கு எதிராக இரண்டு இனங்களும் கரங்கோர்த்து நின்று செயற்பட வேண்டிய தருணம். இதற்கு அதீத முயற்சியெல்லாம் அவசியமல்ல. திறந்த மனதுடனான கலந்துரையாடலும், அதனைத் தொடர்வதற்கான தூரநோக்குடன் கூடிய தலைமைகளுமே அவசியம். அது நடைபெறும்போதே, சிங்கள இனவாதத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயல்படும் கிழக்குமைய, முஸ்லிம் விரோத தமிழ் அரசியல்வாதிகள் களத்தில் இருந்து காணாமற் போவார்கள்.

கிழக்கு மைய அரசியல் பேசுபவர்கள் கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் சமகாலத்தில் செயற்படாமல் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் தமது கவனத்தைக் குவிப்பதற்குக் காரணம் எதுவும் இருக்கிறதா?

தொடரும் ……

சுவிசிலிருந்து சண் தவராஜா

Leave A Reply

Your email address will not be published.