ஓடும் ரயிலில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரயில்வே ஊழியர் பயணிகளால் அடித்துக் கொலை!

ஓடும் ரயிலில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரயில்வே ஊழியர் பயணிகளால் அடித்துக் கொல்லப்பட்டார்.

கடந்த புதன் (செப். 11) அன்று லக்னௌவிலிருந்து கான்பூர் ரயில் நிலையம் சென்றுகொண்டிருந்த ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸில் குரூப் – டி வகைமை ரயில்வே ஊழியரான பிகாரைச் சேர்ந்த பிரசாந்த் குமார் (34) ஏறியுள்ளார்.

பிரசாந்த் இழப்பீட்டு அடிப்படையில் வேலை பெற்று, கிழக்கு மத்திய ரயில்வே சோன்பூர் பிரிவின் பேகுசாராய் ரயில்வே நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். சம்பவம் நடந்த அன்று ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸின் எம் 1 பெட்டியில் ஏறிய பிரசாந்த் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் வைத்திருந்த காரணத்தால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு படுக்கை வசதியில் கீழ் இருக்கை ஒதுக்கப்பட்டது.

பின்னர் நள்ளிரவு 2.30 மணியளவில் அந்தப் பெட்டியில் பெற்றோர், பாட்டி, தம்பியுடன் பயணித்த 11 வயது சிறுமி தன்னை பிரசாந்த் தவறாகத் தொடுவதாகக் கூறியுள்ளார். இதனை அந்தச் சிறுமியின் தாயார் தட்டிக் கேட்டவுடன் அங்கிருந்த சிறுமியின் தந்தையுடன், மற்ற பயணிகளும் இணைந்து பிரசாந்தை தாக்கியுள்ளனர்.

ரயில் கான்பூர் ரயில் நிலையத்தை அடைந்த பின்னர் அங்கிருந்த ரயில்வே காவல்துறையினரிடம் பிரசாந்தை ஒப்படைத்துள்ளனர். அந்த ரயில்வே காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் பிரசாந்த்துக்கு எதிராக புகார் அளித்துள்ளனர்.

பயணிகள் அடித்ததால் படுகாயம் அடைந்த பிரசாந்த் கான்பூர் ரயில்வே காவல்நிலையத்தில் இருந்தார். ஆனால், அவரது உடல்நிலை மோசமாகவே அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

பிரசாந்தின் பெயரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

காவல்துறை அதிகாரிகள் விசாரித்ததில், “பிரசாந்துக்குத் திருமணமாகி இருந்த போதிலும், அவர் குடும்பத்தினருடன் தொடர்பில் இல்லை. மேலும், அவர் மன அழுத்தத்தால் அவதிப்பட்டுள்ளார். அவரின் உடல் தகனம் செய்யப்பட்ட பிறகு அவரது குடும்பத்தினர் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கலாம்” என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

ரயிலில் சிசிடிவி கேமராக்கள் உள்ளதால், குற்றச்சாட்டு செய்யப்பட்டது முதல் துன்புறுத்தல் மற்றும் தாக்குதல் சம்பவம் முழுவதும் பதிவாகியிருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

ஆனால், பிரயாக்ராஜ் பிரிவு எஸ்பி அபிஷேக் யாதவ், பயணிகள் ரயிலில் சிசிடிவி கேமராக்கள் இல்லை என்று மறுத்தார். மேலும், இந்த ரயில் வழக்கமானது அல்ல, இது ஒரு சிறப்பு ரயில். ஆனால், ரயிலில் போலீஸ் படைகள் கூட இல்லாமல் போயுள்ளனர்.

பிரசாந்த் இறந்த பிறகு, அந்தச் சிறுமியின் குடும்பம் அடுத்த ரயிலி ஏறி சென்றனர். பிகாரைச் சேர்ந்த இந்தக் குடும்பத்த்னர் குருகிராம் பகுதியில் வசித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.