மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை கொரோனா அலைக்கு 1,084 பேர் இலக்கு!

மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை
கொரோனா அலைக்கு 1,084 பேர் இலக்கு!

– கம்பஹா மாவட்டத்தின் பல இடங்களில் ஊரடங்கு 

கம்பஹா மாவட்டத்திலுள்ள மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இன்றிரவு 9 மணிவரை அங்கு 1,084 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் பல பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது.

குறித்த பிரதேசங்களிலேயே தொழிற்சாலையின் ஊழியர்கள் அதிகமாக வசிக்கின்றனர்.

இதனால் தொற்றுப் பரவும் அபாயம் நிலவுவதால் அந்தப் பிரதேசங்களுக்கு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அந்தத் தொழிற்சாலையில் பணியாற்றும் மேலும் பலர் சுகாதாரப் பிரிவுக்குத் தகவல் வழங்காது தலைமறைவாக இருக்கின்றார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வத்தளை, கந்தானை, ஜா-எல , களனி, பேலியாகொட, ராகம, கடவத்த ஆகிய பிரதேசங்களில் இருந்து அந்தத் தொழிற்சாலைக்குச் செல்வோர் தங்கி இருந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் இராணுவத்தினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே வெலிசறையில் உள்ள இன்னுமொரு ஆடைத்தொழிற்சாலையிலும் ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த 62 வயதுடைய பேலியகொடைப் பிரதேசத்தைச்  சேர்ந்த கொரோனா நோயாளி ஒருவர் அங்கிருந்து நேற்றிரவு தப்பிச்சென்றிருந்தார். பின்னர் அவர் இன்று மாலை பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகிய ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்குச் சிகிக்சையளித்த கம்பஹா மாவட்ட வைத்தியசாலை வைத்தியர் ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.