முல்லைத்தீவு கடற்கரையில் சுனாமி ஒலியால் பரபரப்பு!
முல்லைத்தீவு கடற்கரையில் நேற்று சுனாமி எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதால் மக்கள் பதற்றமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு கடற்கரையை அண்மித்த பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த எச்சரிக்கை இயந்திரங்களில் இருந்தே, இவ்வாறு ஒலி எழுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து சுனாமி வருகின்றதோ? என்று மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனினும், அது சுனாமி அலையால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை அல்ல என்றும், வட்டுவாகல் கடற்படைத் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட பயிற்சி ஒத்திகையால் எழுப்பப்பட்ட ஒலி என்றும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கைக்கு நிகரான ஒலியெழுப்பி பயிற்சியை மேற்கொள்ளும்போது அது தொடர்பில் பொதுமக்களுக்கு முற்கூட்டிய அறிவுறுத்தல் வழங்கப்பட வேண்டும் என்றும், கடற்படையினர் மக்களை தேவையற்ற விதத்தில் பதற்றமடைய வைக்கக்கூடாது என்றும் பொதுமக்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.